செய்திகள்
மாங்காமலையில் காட்டு யானைகளால் அழிக்கப்பட்ட அன்னாசி தோட்டம்.

காட்டு யானைகளால் அன்னாசி பயிர்கள் சேதம்- விவசாயிகள் வேதனை

Published On 2021-04-08 10:31 GMT   |   Update On 2021-04-08 10:31 GMT
கோதையார் வனப்பகுதிகளிலுள்ள காட்டு யானைகள் தண்ணீர் தேடி விவசாய நிலங்களுக்கு படையெடுத்து வருகிறது
களியல்:

குமரி மாவட்டத்தில் உள்ள கோதையார் வன பகுதி காட்டு யானைகளின் வாழ்விடமாகும். கேரள வனப் பகுதிகளிலிருந்தும், கோதையாறுக்கு யானைகள் வருவதுண்டு. தற்போது கோடை காலமானதால் வனப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. இதன் காரணமாக கோதையார் வனப்பகுதிகளிலுள்ள காட்டு யானைகள் தண்ணீர் தேடி விவசாய நிலங்களுக்கு படையெடுத்து வருகிறது

கடந்த இரண்டு நாட்களாக பழங்குடி மக்கள் வசிக்கின்ற மாங்காமலை பகுதிக்கு நள்ளிரவில் கூட்டமாக வரும் காட்டு யானைகள், அங்குள்ள அன்னாசி தோட்டங்களை அழித்து வருகின்றன. இதனால் அரசு ரப்பர் கழகத்தின் கூப்பு எண் 65-ல் அன்னாசி விவசாயம் செய்யும் விவசாயி பிரசாத் லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். யானைகள் வருகையால் அப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இன மக்களும், இரவு தூங்காமல் விழித்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயி பிரசாத் கூறியதாவது:-

நாங்கள் அரசு ரப்பர் கழகத்திலிருந்து நிலத்தை குத்தகைக்கு எடுத்து அன்னாசி விவசாயம் செய்து வருகிறோம். கடந்த ஒரு வருடமாக பராமரித்து, செடிகளிலிருந்து தற்போது காய் வரும் நிலையில் யானைகள், தோட்டங்களில் புகுந்து செடிகளை அழித்ததால், லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நள்ளிரவு 12 மணி அளவில் யானைகள் கூட்டமாக வருகிறது. மூக்கறக்கல், மோதிரமலை வழியாக மாங்காமலைக்கு வரும் யானைகள், பேச்சிப்பாறை அணைகட்டில் தேங்கி உள்ள தண்ணீரை குடித்த பின் திரும்பி செல்கின்றன.

வழியில், பழங்குடி மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கும் யானைகள் செல்கின்றன. இதனால் இப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பழங்குடி மக்கள் விழித்திருந்து காட்டு யானைகளை வேறு பகுதிகளுக்கு துரத்தி விடுகின்றனர்.

யானைகளால் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் கோடை காலத்தில் வன விலங்குகள் ஊருக்குள் புகாமல் இருக்க வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வனத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரசாத் கூறினார்.
Tags:    

Similar News