ஆன்மிகம்
முன்னுதித்த நங்கை அம்மன் சுசீந்திரத்துக்கு கொண்டு வரப்பட்ட போது எடுத்த படம்.

முன்னுதித்த நங்கை அம்மன் சுசீந்திரம் கோவிலுக்கு வந்தடைந்தார்: பக்தர்கள் மலர் தூவி வரவேற்பு

Published On 2020-11-01 07:47 GMT   |   Update On 2020-11-01 07:47 GMT
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க சென்ற முன்னுதித்த நங்கை அம்மன் சிலை சுசீந்திரம் வந்து சேர்ந்தது. பக்தர்கள் மலர் தூவி வரவேற்றனர்.
திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஆட்சி காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பின்னர் மன்னர் தலைநகரை திருவனந்தபுரத்துக்கு மாற்றினார். அதைத்தொடர்ந்து நவராத்திரி விழாவும் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டத்தில் இருந்து சாமி சிலைகள் திருவனந்தபுரம் செல்வது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டும் விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் அரண்மனை தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் கடந்த மாதம் 14-ந் தேதி பத்மநாபபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்று, திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்றன. அந்த சாமி சிலைகள் கடந்த 27-ந் தேதி திருவனந்தபுரத்திலிருந்து மீண்டும் ஊர்வலமாக குமரி மாவட்டத்திற்கு புறப்பட்டது. நேற்று முன்தினம் காலை பத்மநாபபுரம் அரண்மனை வந்தடைந்த சாமி சிலைகளுக்கு கோட்டை வாசலில் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சரஸ்வதி அம்மன் தேவார கட்டு கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டது. இதே போல் வேளிமலை முருகன் குமாரகோவில் சென்றடைந்தது.

அதைத்தொடர்ந்து முன்னுதித்த நங்கை அம்மன் நேற்று அதிகாலை 4 மணி அளவில் பத்மநாபபுரத்தில் இருந்து சுசீந்திரத்துக்கு புறப்பட்டது. காலை 8 மணிக்கு மேல் முன்னுதித்த நங்கை அம்மன் மேளதாளத்துடன் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் சுசீந்திரம் வந்தடைந்தது. குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி தலைமையில் திருக்கோவில் பணியாளர்கள், பக்தர்களும், ஊர் பொதுமக்களும் பாரம்பரிய முறைப்படி மலர்தூவி நான்கு ரத வீதிகள் வழியே அம்மனை வரவேற்றனர். கோவில் முன் அம்மனுக்கு தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகமும், ஆறாட்டு வைபவமும் நடந்தது. பின்னர் அம்மன் கோவில் கருவறைக்குள் கொண்டு செல்லப்பட்டார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News