ஆன்மிகம்
நாங்கூர் கிராமத்தில் 11 பெருமாள் கருடசேவை உற்சவம்

நாங்கூர் கிராமத்தில் 11 பெருமாள் கருடசேவை உற்சவம்

Published On 2021-02-13 04:22 GMT   |   Update On 2021-02-13 04:22 GMT
நாங்கூர் கிராமத்தில் 11 பெருமாள் கருட சேவை உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே நாங்கூர் கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியை சுற்றி, வைணவ திவ்ய தேச பெருமாள் கோவில்கள் 108, பதினொரு கோவில்கள் ஒரே தொகுப்பாக அமைந்துள்ளன. அதாவது நாராயண பெருமாள், குடமாடு கூத்தர், செம்பொன் அரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், அண்ணன் பெருமாள், புருஷோத்தம பெருமாள், திருமணிக்கூடம் வரதராஜ பெருமாள், வைகுண்ட நாத பெருமாள், பார்த்தசாரதி பெருமாள், மாதவபெருமாள், கோபாலன் ஆகிய கோவில்களாகும்.

இந்த 11 பெருமாள்களும், நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் ஒருசேர எழுந்தருளி, திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்வதே கருடசேவை உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கருடசேவை உற்சவம் நேற்று நாங்கூர் நாராயண பெருமாள் கோவிலில் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் இருந்து பெருமாள்களை, பக்தர்களால் மேளதாளம் முழங்கிட ஊர்வலமாக நாராயண பெருமாள் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது கோவிலின் வாசலில், திருமங்கையாழ்வார் எழுந்தருளி அனைத்து பெருமாள்களையும் வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அனைத்து பெருமாள்களுக்கும் சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து 11 பெருமாள்களும் கோவிலின் வாசலில் எழுந்தருளி திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்யும் வைபவம் நடந்தது. இதையடுத்து ஒரு சேர அனைத்து பெருமாள்களுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பாரதி எம்.எல்.ஏ., மயிலாடுதுறை இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் செல்வராஜ், கோவில் நிர்வாக அதிகாரிகள் குணசேகரன், முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன், மாவட்ட அ.தி.மு.க. இளம்பெண்கள். இளைஞர் பாசறை செயலாளர் மாமல்லன், விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டன. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜே‌‌ஷ் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.
Tags:    

Similar News