ஆன்மிகம்
நாகராஜா கோவில்

நாகராஜா கோவிலில் தைத்திருவிழா 31-ந் தேதி தொடங்குகிறது

Published On 2020-01-16 06:42 GMT   |   Update On 2020-01-16 06:42 GMT
நாகர்கோவிலில் உள்ள புகழ்பெற்ற நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தைத்திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா வருகிற 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகர்கோவிலில் உள்ள புகழ்பெற்ற நாகராஜா கோவிலில் ஆண்டுதோறும் தைத்திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக்கான தைத்திருவிழா வருகிற 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து பிப்ரவரி மாதம் 9-ந் தேதி வரை 10 நாட்கள் விழா நடக்கிறது.

விழாவின் முதல் நாளில் காலை 7 மணிக்கு கொடியேற்றம், பூஜை, சிறப்பு அபிஷேக பூஜை போன்றவை நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், இரவு 7.30 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, 8.30 மணிக்கு பரத நாட்டியம், 9 மணிக்கு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல் ஆகியவை நடக்கின்றன.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சமய சொற்பொழிவு, ஆன்மிக சொற்பொழிவு, மண்டகப்படி, நகைச்சுவை இசை சொல்லரங்கம், பரதநாட்டியம், சிங்க வாகனத்தில் சாமி எழுந்தருளல், பக்தி இன்னிசை, நடன நிகழ்ச்சி, கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், ஆதிசேஷ வாகனத்தில் சாமி எழுந்தருளல், கலை நிகழ்ச்சி, பக்தி பஜனை, இந்திர வாகனத்தில் சாமி எழுந்தருளல் அன்ன வாகனத்தில் சாமி எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது. அடுத்த மாதம் 8-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டமானது காலை 7.30 மணிக்கு தொடங்கி 8.30 மணிக்கு முடிவடைகிறது. பின்னர் 10 மணிக்கு அன்னதானமும், இரவு 9.30 மணிக்கு சப்தாவர்ணமும் நடக்கிறது.

திருவிழாவின் இறுதி நாளான 9-ந் தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 11 மணிக்கு ஆயில்ய பூஜை, மாலை 5 மணிக்கு சாமி ஆறாட்டுக்கு எழுந்தருளல், 6 மணிக்கு இன்னிசை சொல்லரங்கம், இரவு 8.15 மணிக்கு பக்தி மெல்லிசை, 9.30 மணிக்கு ஆறாட்டு துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளல் ஆகியன நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News