செய்திகள்
உருமாண்டம்பாளையம் பகுதியில் மழைக்கு வீடு இடிந்து கிடக்கும் காட்சி.

கோவை, நீலகிரியில் விடிய விடிய சாரல் மழை- தொழிலாளி வீடு இடிந்தது

Published On 2021-09-03 10:29 GMT   |   Update On 2021-09-03 10:29 GMT
தொடர்ந்து பெய்து வரும் மழையால் பந்தலூர் அருகே உள்ள பொன்னானி, சோலாடி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கவுண்டம்பாளையம்:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது.

பந்தலூர் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக காற்றுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. நேற்றும் பந்தலூர், எருமாடு, சேரம்பாடி, அய்யன்கொல்லி, பிதர்காடு, உப்பட்டி, பாட்டவயல், நெலாக்கோட்டை பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே கனமழை பெய்தது. இரவிலும் இந்த மழை நீடித்தது.

மழை காரணமாக முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பந்தலூர் அருகே உள்ள பொன்னானி, சோலாடி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பொன்னானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அருகே உள்ள கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. அங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் விளையாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர்.

மாவட்டத்தில் உள்ள பிற பகுதிகளான குன்னூர், கோத்தகிரி, ஊட்டி, மஞ்சூர் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காலையில் இருந்தே விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலையும் இந்த சாரல் மழை நீடித்தது. தொடர்மழையால் மாவட்டத்தில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள ஆட்டோ டிரைவர்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். மக்கள் அனைவரும் சுவர்ட்டர் அணிந்தபடியே வெளியில் நடமாடுகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை, காரமடை போன்ற புறநகர் பகுதிகளிலும், மாநகர் பகுதிகளிலும் காலை முதல் அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று இரவில் திடீரென சாரல் மழை தொடங்கியது. இந்த மழை விடிய விடிய நீடித்து தற்போது சாரல் பெய்து கொண்டே இருக்கிறது.

திடீர் மழையால் மாவட்டம் முழுவதுமே குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கவுண்டம்பாளையம் அடுத்த உருமாண்டம் பாளையம் ஜீவா வீதியை சேர்ந்தவர் முருகன்(58). தொழிலாளி. இவர் அங்கு தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இரவு முழுவதும் பெய்த சாரல் மழைக்கு இன்று காலை 7 மணியளவில் இவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. விபத்தின்போது அனைவரும் வீட்டிற்கு வெளியில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றனர்.

கோவை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

அன்னூர்-25, விமான நிலையம்-24.8, சின்னகல்லார்-22, சூலூர்-20, வால்பாறை பி.ஏ.பி-14, வால்பாறை தாலுகா-12.


Tags:    

Similar News