ஆன்மிகம்
முடவன் முழுக்கு விழாவில் பக்தர்கள் புனித நீராடிய போது எடுத்த படம்.

மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் முடவன் முழுக்கு விழா

Published On 2021-11-18 04:31 GMT   |   Update On 2021-11-18 04:31 GMT
மயிலாடுதுறை காவிரி துலாகட்டத்தில் முடவன் முழுக்கு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
மயிலாடுதுறையில் துலா மாதம் என்றழைக்கப்படும் ஐப்பசி மாதத்தில் 30 நாட்களும் துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்தில் காவிரி துலா கட்டத்தில் கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகள் அனைத்தும் புனித நீராடி பாவங்களில் இருந்து விடப்பட்டதாக ஐதீகம். ஒரு காலத்தில் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் ஐப்பசி கடைசி நாளில் கடைமுக தீர்த்தவாரி விழா நடந்துள்ளது. அதில் கலந்து கொண்டு புனித நீராட வெளியூரை சேர்ந்த நடக்க முடியாத பக்தர் ஒருவர் விரும்பினார். ஆனால் அவரால் உரிய நேரத்தில் விழாவிற்கு வர முடியவில்லை. அவர் வருவதற்குள் கடைமுக தீர்த்தவாரி விழா முடிவடைந்து விடுகிறது.

இதனால் மனமுடைந்த பக்தர் இறைவனை நோக்கி வருத்தத்துடன் பிரார்த்தனை செய்ததால், அவருடைய கண் முன்பு தோன்றிய சிவபெருமான் உன்னை போன்று கடைமுக தீர்த்தவாரி விழாவில் கலந்து கொள்ள இயலாதவர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதி காவிரி துலா கட்டத்தில் புனித நீராடி வழிபட்டால் ஐப்பசி மாதம் முப்பது நாட்களும் காவிரியில் புனித நீராடிய பலனைப் பெறுவார்கள் என்று அருளாசி வழங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி மயிலாடுதுறை துலா கட்டத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் நாளில் முடவன் முழுக்கு விழா நடந்து வருகிறது. வழக்கம்போல நேற்று மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு விழா நடந்தது. இதையொட்டி மயூரநாதர் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்டு காவிரி துலாகட்டத்தில் எழுந்தருளிய அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் அஸ்திரதேவர் காவிரியில் தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது காவிரியில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
Tags:    

Similar News