ஆன்மிகம்
சிவன்

ஈசனின் நாமத்தால் கிடைக்கும் பாக்கியம்

Published On 2020-12-17 08:09 GMT   |   Update On 2020-12-17 08:09 GMT
‘சிவயநம’ என்று உள்ளம் உருகக் கூறினால், இந்தப் பிறவியில் இருந்து விடுபடலாம். இதை உணர்த்தும் ஆன்மிக கதையை அறிந்து கொள்ளலாம்.
ஈரேழு உலகங்களுக்கும் சென்று வரும் பாக்கியத்தைப் பெற்றவர், நாரத முனிவர். அவரது தந்தையாக விளங்குபவர், படைப்புத் தொழிலை மேற்கொள்ளும் பிரம்மதேவன் ஆவார். ஒவ்வொரு நொடியும் நாராயணரின் நாமத்தை உச்சரித்தபடியே இருக்கும் வரத்தைப் பெற்றவர், நாரதர். அவருக்கு ஒரு நாள் ஒரு சந்தேகம் எழுந்தது. நேராக தன் தந்தையிடம் சென்று, தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டார்.

“தந்தையே.. சிவ நாமங்களில் உயர்ந்தது ‘சிவாயநம’ என்று கூறுகிறார்களே. இதன் பொருள் என்ன என்பதை எனக்கு விளக்கி கூறுங்கள்” என்றார்.

பிரம்மா நாரதரிடம், “நாரதா, அதோ அங்கே வண்டு ஒன்று அமர்ந்துள்ளது. அதனிடம் போய் உன் சந்தேகத்தைக்கேள்” என்றார்.

நாரதரும் அதன்படியே அந்த வண்டு அருகில் சென்று தனது சந்தேகத்தைக் கேட்டார். நாரதர் அந்த சந்தேகத்தைக் கேட்ட மறுநொடியே அந்த வண்டு சுருண்டு விழுந்து இறந்தது.

இதைப் பார்த்த நாரதருக்கு அதிர்ச்சியாகி விட்டது. அவர் பிரம்மாவிடம் ஓடிச்சென்று, “தந்தையே, சிவாயநம என்பதன் பொருளைத் தெரிந்து கொண்டேன். இந்த நாமத்தை யார் கேட்கிறார்களோ அவர்கள் இறந்து போவார்கள்” என்றார்.

“நாரதா, நீ தவறாகப் புரிந்து கொண்டாய். அதோ, அந்த மரத்தில் அமர்ந்திருக்கும் ஆந்தையிடம் கேள், அது பதிலளிக்கும்” என்று சிரித்தபடியே கூறினார் பிரம்மா.

நாரதரும் ஆந்தையிடம் சென்று இதே கேள்வியைக் கேட்க, அதுவும் வண்டைப் போலவே, கீழே விழுந்து உயிர்விட்டது. நாரதர் பதறிவிட்டார்.

மீண்டும் பிரம்மாவிடம் சென்று, “என்ன இது சோதனை?” என்று கேட்டார்.

பிரம்மனோ, “நாரதா.. உனக்கு இன்னும் விளங்க வேண்டும் என்றால், அதோ அங்கிருக்கும் வீட்டில் இப்போதுதான் ஒரு கன்றுக்குட்டி பிறந்துள்ளது. அதனிடம் கேள். பதில் கிடைக்கும்” என்றார்.

நாரதரும், கன்றிடம் சென்று அதே கேள்வியைக் கேட்டார். அப்போது தான் பிறந்திருந்த கன்று, உடனடியாக தன் உயிரை விட்டது. நாரதருக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது. நாரதர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

‘இவ்வளவு சக்தி வாய்ந்த மந்திரமா இது. பூச்சிகள், பறவைகள், விலங்குகளின் கதியே இப்படி என்றால், இதைக்கேட்கும் மனிதனின் கதி என்ன ஆகும்’ என நினைத்தார் நாரதர்.

அப்போது, அங்கு வந்த பிரம்மா, நாரதரிடம் “கன்றும் இறந்து விட்டதா?. சரி பரவாயில்லை. இந்நாட்டு மன்னனுக்கு இப்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தையிடம் போய் இதற்கு விளக்கம் கேள்” என்றார்.

இதைக்கேட்ட நாரதர் அலறிவிட்டார், பிரம்மதேவா என்ன இது? அந்தக் குழந்தைக்கு எதுவும் ஆபத்து வந்தால், குழந்தையின் இறப்புக்கு காரணமானவனாக மாறிவிடுவேனே,” என்றார்.

இருந்தாலும் பிரம்மா விடவில்லை. “இதுவரை இறந்தவைக்கு என்னால் எழுதப்பட்ட விதி முடிந்து விட்டது, அவ்வளவுதான். அதனால் குழந்தையிடம் கேள். பொருள் நிச்சயம் தெரியும்” என்றார்.

நாரதர் கை, கால் நடுங்க குழந்தையிடம் இதைக் கேட்டார். அந்தக் குழந்தை பேசியது. “நாரதரே, இந்த மந்திரத்தைக் கேட்டதால் வண்டாக இருந்த நான் ஆந்தையானேன். அதன்பின் கன்றாகப் பிறந்தேன். இப்போது மனிதன் ஆனேன். பிறவியில் உயர்ந்த மானிடப்பிறப்பை இந்த மந்திரம் எனக்குத் தந்தது. இதுவே என்னை இறைவனிடம் சேர்க்கும் ஒப்பற்ற பிறவியாகும்” என்று குழந்தை கூறியது.

நாரதர் இப்போது பிரம்மனிடம் வந்தார். நாரதரிடம் இருந்த தெளிவைக் கண்டு பிரம்மதேவர் கூறினார். “சிவாயநம என்பதை ‘சிவயநம’ என்றே உச்சரிக்க வேண்டும். ‘சி’ என்றால் சிவம்; ‘வ’ என்றால் திருவருள், ‘ய’ என்றால் ஆன்மா, ‘ந’ என்றால் திரோதமலம், ‘ம’ என்றால் ஆணவமலம். திரோதமலம் என்பது அழுக்கை நீக்கும் பொருள்.

நான் என்ற ஆணவ அழுக்கை பூசியிருக்கும் ஆன்மா, திரோதமலம் கொண்டு அதை சுத்தம் செய்து, சிவத்தை அடைந்து பிறவிப்பிணியில் இருந்து விடுபடும் என்பது இதன் பொருள். ‘சிவயநம’ என்று உள்ளம் உருகக் கூறினால், இந்தப் பிறவியில் இருந்து விடுபடலாம்” என்றார் பிரம்மன்.

இதைக்கேட்டு நாரதரும் சந்தேகம் தெளிந்தார்.
Tags:    

Similar News