இந்தியா
பங்கஜ் சவுத்ரி

ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தம்: மத்திய மந்திரி தகவல்

Published On 2021-12-08 02:04 GMT   |   Update On 2021-12-08 02:04 GMT
பனாமா பேப்பர்ஸ் வழக்கிலும், பேரடைஸ் பேப்பர்ஸ் வழக்கிலும் வெளிநாடுகளில் கருப்பு பணம் மூலம் சொத்துகள் வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்தியர்கள் பட்டியல் வெளிவந்தது.
புதுடெல்லி :

பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி ஒரு கேள்விக்கு எழுத்துமூலம் பதில் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து, ரூ.2,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி நிலவரப்படி, 336 கோடியே 30 லட்சம் எண்ணிக்கையில் ரூ.2,000 நோட்டுகள் இருந்தன. இது, அப்போதைய மொத்த நோட்டுகளில் 3.27 சதவீதம் ஆகும்.

ஆனால், கடந்த மாதம் 26-ந்தேதி நிலவரப்படி, புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் எண்ணிக்கை 223 கோடியே 30 லட்சமாக குறைந்தது. இது தற்போதைய மொத்த நோட்டுகளில் வெறும் 1.75 சதவீதம் மட்டுமே.

மக்களின் பரிமாற்ற தேவையை பொறுத்து, ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்தி, குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க மத்திய அரசு முடிவு செய்கிறது.

ஆனால், 2018-2019-ம் நிதியாண்டில் இருந்தே ரூ.2,000 நோட்டுகள் அச்சடிக்க ‘ஆர்டர்’ கொடுக்கப்படவில்லை. மேலும், அந்த நோட்டுகள் அழுக்கடைந்ததாலும், சிதைந்ததாலும் புழக்கத்தில் இருந்து குறைந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மற்றொரு கேள்விக்கு பங்கஜ் சவுத்ரி கூறியதாவது:-

பனாமா பேப்பர்ஸ் வழக்கிலும், பேரடைஸ் பேப்பர்ஸ் வழக்கிலும் வெளிநாடுகளில் கருப்பு பணம் மூலம் சொத்துகள் வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்தியர்கள் பட்டியல் வெளிவந்தது.

இதில், இந்தியா சம்பந்தப்பட்ட 930 நிறுவனங்கள் கணக்கில் காட்டாத ரூ.20 ஆயிரத்து 353 கோடி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக இதுவரை ரூ.153 கோடியே 88 லட்சம் வரி வசூலிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவிண் பவார் கேள்விகளுக்கு அளித்த பதில் வருமாறு:-

கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 94 நாடுகள் மற்றும் 2 ஐ.நா. நிறுவனங்களுக்கு இந்தியா 723 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை வினியோகித்துள்ளது. இதுதவிர, 150 நாடுகளுக்கு கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

100 கோடி தடுப்பூசி செலுத்தியதை முன்னிட்டு, முக்கிய இடங்களில் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைத்ததற்காக, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தகவல் பிரிவுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வினியோகம் சீராக இருந்தால், 100 கோடி தடுப்பூசி சாதனையை முன்பே நிகழ்த்தி இருக்கலாம் என்று கூறுவதை ஏற்க முடியாது. தடுப்பூசி வினியோகம் சரியாகவே நடந்தது.

தடுப்பூசி கொள்முதலுக்கு இதுவரை ரூ.19 ஆயிரத்து 675 கோடி செலவிடப்பட்டது.

கடந்த மாதம் 29-ந்தேதி நிலவரப்படி, கொரோனாவால் உயிரிழந்த 1,509 சுகாதார பணியாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சத்துக்கான காப்பீட்டு வசதி அளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:-

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ், நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்த 2 லட்சத்து 6 ஆயிரத்து 523 விவசாயிகளுக்கு இதுவரை ரூ.229 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News