உள்ளூர் செய்திகள்
தளி பேரூராட்சி

தளி பேரூராட்சிக்கு கூடுதல் நிதி- மலைவாழ் மக்கள் வலியுறுத்தல்

Published On 2021-12-29 08:56 GMT   |   Update On 2021-12-29 08:56 GMT
தளி பேரூராட்சியில் 15 வார்டுகளை 17 வார்டுகளாக உயர்த்தி வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் தளி பேரூராட்சி வார்டு மறுவரையறை குறித்து கருத்து கேட்பு கூட்டம் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு மறுவரையறை ஆணையம் மற்றும் பேரூராட்சிகளின் ஆணையாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார்.

கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். வார்டு மறுவரைறை கருத்துருக்கள் தொடர்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்களின் ஆட்சேபனைகள் தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டது. தளி பேரூராட்சியின் முன்னாள் தலைவர்கள், கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-

தளி பேரூராட்சியில் 15 வார்டுகளை 17 வார்டுகளாக உயர்த்தி வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுமலை வனச்சரக பகுதியில் உள்ள திருமூர்த்தி மலை, குருமலை, பூச்சிக்கொட்டாம்பாறை, மேல்குருமலை ஆகிய 4 செட்டில்மெண்ட் பகுதிகளையும் தளி பேரூராட்சியுடன் இணைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செட்டில்மெண்ட் பகுதியில் உள்ளவர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செட்டில்மெண்ட் பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் தங்களுக்கு தனி ஊராட்சியாக அமைக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

ஊராட்சியாக இருந்தால் தான் அவர்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்டவை கிடைக்கப்பெறும். பேரூராட்சியுடன் இணைத்தால் செட்டில்மெண்ட் பகுதிக்கு செல்ல சாலை வசதியில்லை. ஒவ்வொரு செட்டில்மெண்ட் பகுதிக்கும் 10 கிலோ மீட்டர் தூரம் இடைவெளி உள்ளது. 

நலத்திட்டங்கள், அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் சிரமம் ஏற்படும். ஒவ்வொரு முறையும் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றே அந்த பகுதிகளுக்கு செல்ல முடியும். அதனால் தனி ஊராட்சியாக அமைக்கலாம்.

தளி பேரூராட்சியுடன் இணைக்கும்போது அங்கு அடிப்படை கட்டமைப்புகளை செய்யும்போது எந்தவித இடையூறும், தாமதமும் இல்லாமல் இருக்கும் வகையில் வனத்துறையிடம் தெளிவான வழிமுறைகளை தெரிவிக்க வேண்டும். அதுபோல் தளி பேரூராட்சிக்கு போதிய வருமானம் இல்லை. அதனால் கூடுதல் நிதி ஆதாரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து திருமூர்த்தி மலை செட்டில்மெண்ட் வன உரிமைக்குழு தலைவர் மணிகண்டன் பேசும்போது, செட்டில்மெண்ட் பகுதிகளை தளி பேரூராட்சியுடன் இணைத்ததற்கு மகிழ்ச்சி அடைகிறோம். தனி ஊராட்சியாக அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். எங்களுக்கு வாக்குரிமை அளிக்கும் வகையில் அரசு இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

மக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கிக்கொடுக்க வேண்டும் என்றார். மேலும் மலைவாழ் மக்கள் பேசும்போது, செட்டில்மெண்ட் பகுதிகளை கொண்ட வார்டுக்கு கவுன்சிலராக எஸ்.டி. ஆண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போது தான் மக்களுக்கும், உள்ளாட்சி நிர்வாகத்துக்கும் தகவல் பரிமாற்றம் செய்ய வசதியாக இருக்கும் என்றனர்.

கூட்டத்தில் பேரூராட்சிகளின் ஆணையாளர் செல்வராஜ் பேசும்போது, பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் தெரிவித்த கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவை அரசுக்கு தெரிவிக்கப்படும். மக்களுக்கு நன்மை அளிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

கூட்டத்தில் 3 மனுக்கள் பெறப்பட்டன. அவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு மறுவரையறை ஆணையத்துக்கு உடனடியாக அறிக்கை அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் உதவி ஆணையாளர் (தேர்தல்) சம்பத்குமார், உதவி இயக்குனர் (தேர்தல்) சுந்தரமூர்த்தி, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) வெங்கடேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News