செய்திகள்
உத்தவ் தாக்கரே, சரத்பவார்

உறுதியற்ற தன்மையில் கூட்டணி அரசு?: உத்தவ் தாக்கரே- சரத்பவார் சந்திப்பால் பரபரப்பு

Published On 2021-05-28 01:57 GMT   |   Update On 2021-05-28 01:57 GMT
பல்வேறு பிரச்சினைகளில் அரசு உறுதித்தன்மை இழந்து இருக்கும் நிலையில், முதல்-மந்திரியை சரத்பவார் சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. ஆனால் இதை தேசியவாத காங்கிரஸ் மறுத்துள்ளது.
மும்பை :

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கடந்த மாதம் பித்தப்பை கல் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய பின் அவரை மகாவிகாஸ் கூட்டணியில் அங்கம் வகித்து உள்ள சிவசேனா, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்தநிலையில் சரத்பவார் நேற்று முன்தினம் தென்மும்பையில் உள்ள வர்ஷா பங்களாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய பிறகு சரத்பவார் முதல்-மந்திரியை சந்தித்து பேசுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த சந்திப்பின் போது மாநிலத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் மகாவிகாஸ் அகாடி அரசு கொரோனாவை கையாளும் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது 2-வது அலையை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட கட்டுப்பாடுகள், அரசு கொரோனாவை கையாளும் விவகாரத்தில் சரத்பவார் திருப்பதியை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே பல்வேறு பிரச்சினைகளில் அரசு உறுதித்தன்மை இழந்து இருக்கும் நிலையில், முதல்-மந்திரியை சரத்பவார் சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. ஆனால் இதை தேசியவாத காங்கிரஸ் மறுத்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவரும், மந்திரியுமான ஜெயந்த் பாட்டீல் கூறியதாவது:-

மகா விகாஸ் கூட்டணி அரசில் எந்த உறுதியற்ற தன்மையும் இல்லை. முதல்-மந்திரி, சரத்பவார் சந்திப்பு எதற்காக நடந்தது என்பது எனக்கு தெரியாது. ஆனால் அரசின் உறுதியற்ற தன்மை தொடர்பான கேள்விக்கே இடமில்லை. புதிய பிரச்சினைகள் வரத் தான் செய்கின்றன. ஆனால் அதற்கும், இந்த சந்திப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை.

மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினையில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் முடிவு எடுக்க வேண்டும். இந்த பிரச்சினையில் மத்திய அரசை மராட்டிய பா.ஜனதா தலைவர்கள் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News