லைஃப்ஸ்டைல்
உடற்பயிற்சியை தொடங்குவது எப்படி?

உடற்பயிற்சியை தொடங்குவது எப்படி? தொடர்வது எப்படி?

Published On 2019-07-17 06:10 GMT   |   Update On 2019-07-17 06:10 GMT
‘நானும் உடற்பயிற்சி செய்யும் பேர்வழி’ என்று தடாலடியாக தலைதெறிக்க ஓடுவதோ, கண்ணில் காணும் பளுவை எல்லாம் தூக்குவதோ ஆபத்தில்தான் முடியும்.
‘நானும் உடற்பயிற்சி செய்யும் பேர்வழி’ என்று தடாலடியாக தலைதெறிக்க ஓடுவதோ, கண்ணில் காணும் பளுவை எல்லாம் தூக்குவதோ ஆபத்தில்தான் முடியும். அப்படியென்றால் உடற்பயிற்சியை எப்படித்தான் ஆரம்பிப்பது?

சீரான மூச்சில் இருந்து உடற்பயிற்சிக்கான மூச்சுத் திறமையை வளர்த்துக் கொள்ள 6 முதல் 8 வாரங்கள் தேவை. அப்போது மெதுவாக வாக்கிங், வேகநடை, மெது ஓட்டம், மித ஓட்டம், வேக ஓட்டம் என உங்கள் வயதுக்கேற்ப தொடங்க வேண்டும்.

உடற்பயிற்சிக்கான சற்று அதிக பளுவை தாங்கக்கூடிய இதய வலிமை, நுரையீரல் வலிமை, எலும்புகள் இணையுமிடங்களின் வலிமை, தசைகளின் வலிமை, மன வலிமை என அனைத்தையும் படிப்படியாக மூச்சுத் திறமையால் கையாள தொடங்கவேண்டும்

முதல் 8 வாரங்கள் உடற்பயிற்சியை மெதுவாக, சிறியதாகத் தொடங்கி, சீராகக் கூட்டி ஆனால், தொடர்ச்சியாக அடுத்த 24 மணி நேரத்துக்குள் அல்லது அதிகபட்சம் 48 மணி நேரத்துக்குள் மீண்டும் தொடர்வது மிகஅவசியம்.

இல்லாவிட்டால் நீங்கள் பட்ட சிரமம், உங்கள் பலம் அனைத்தும் பலவீனமாக வாய்ப்புண்டு. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் உடல், மன வலிமை கூடிக்கொண்டே இருப்பது உண்மை. வாரம் 4 அல்லது 5 நாட்கள், அதில் தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் தொடர் உடற்பயிற்சி மிகவும் அற்புதமான தொடக்கமாகும்.

சிறப்புத் துறையில் ஈடுபாடு (Principle Of Specificity) முதல் 6 8 வாரங்களில் படிப்படியான முன்னேற்றத்துக்குப் பிறகு மேலும் படிப்படியாக, சிறுகச் சிறுக, தங்களுக்குத் தேவையான விளையாட்டுகளில் கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, நீந்தல், சிறகுப்பந்து, டென்னிஸ், ஓட்டப்பந்தயம், குஸ்தி, பாக்ஸிங், பளு தூக்குதல், நடனப் பயிற்சிகள், ஆண் அழகன், பெண் அழகி என குறிப்பிட்ட பயிற்சிகளில், சிறந்த பயிற்சியாளர்களின் துணையோடு கவனம் செலுத்த வேண்டும்.

இந்த சிறப்புப் பயிற்சிகள் அவரவர் விளையாட்டுக்கேற்ப, பலவித மாறுதல்கள் கொண்டதாக அமையும். எல்லாவற்றுக்கும் ஒரே விதமான பயிற்சி பலன் அளிக்காது. குறிப்பிட்ட பயிற்சி அளிப்பதில் வல்லுனரான பயிற்சியாளரிடம் செல்வதே உங்களின் திறமையை வளர்க்கவும் அந்த விளையாட்டில் நீங்கள் தலைசிறந்து விளங்கவும் வாய்ப்பாக அமையும். ஒன்றுமே செய்யாமல் சோம்பேறியாக இருப்பது, உடலை வாட்டி வதைத்து கொள்வது இவ்விரண்டையுமே நம் உடல் அறவே வெறுக்கிறது.

சமீபகாலமாக சில ஆண்கள் 6 அல்லது 8 பேக் என்று சொல்லிக் கொண்டு, 10 மணி நேரம் ஜிம்மில் தண்ணீர் கூடக் குடிக்காமல் உடலை வதைக்கின்றனர். அதே 24 மணி நேரமும் டி.வி. பார்ப்பது, மொபைல் போனிலேயே வாழ்வது என்றும் சிலர் இருக்கின்றனர்.

சில பெண்கள் எப்போதும் துணி துவைப்பது, தண்ணீர் அடித்து, எடுப்பது, அடுப்படியில் அவதிப்படுவது என இருப்பார்கள். இப்படி உடலுக்கு ஓய்வே இல்லாமல், உடலை வதைத்து, கொடுமைப் படுத்துவதையும் நம் உடல் விரும்பாது. அப்படி என்றால் உடலுக்கு உகந்ததுதான் என்ன?

நம் உடல் சில நேரங்களில் சிறிய, பளு குறைந்த வேலைகளையும் சில நேரங்களில் சற்று அதிக பளு உடைய வேலைகளையும் மாறி மாறிச் செய்து, சற்று ஓய்வுக்குப் பிறகு மீண்டும் செய்வதை மிகவும் ரசித்து விரும்புகிறது. இது உடற்பயிற்சி செய்வோருக்கு மட்டுமல்ல... அனைவருக்குமே பொருந்தும். ஆகவே... உடலை நேசித்து அதன் அன்பைபெறுங்கள்!
Tags:    

Similar News