லைஃப்ஸ்டைல்
ஒரு வயதான குழந்தைக்கு கொடுக்க வேண்டிய புரதச்சத்து நிறைந்த உணவுகள்

ஒரு வயதான குழந்தைக்கு கொடுக்க வேண்டிய புரதச்சத்து நிறைந்த உணவுகள்

Published On 2020-12-12 06:19 GMT   |   Update On 2020-12-12 06:19 GMT
ஒரு வயது நிறைந்த குழந்தைக்கு புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். எனவே புரதம் நிறைந்த உணவுகளில் குழந்தைக்கு எதையெல்லாம் தரலாம் என்று பார்க்கலாம்.
ஒரு வயது நிறைந்த குழந்தைக்கு செரிமானம் வளர்ச்சி அதிகரிக்கும். அந்த நேரத்தில் புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். மருத்துவர்கள் 1-3 வயது நிறைந்த குழந்தைக்கு தினசரி 1300 கலோரிகளும் 16 கிராம் புரதமும் கொடுக்க வேண்டும் என்கின்றனர். எனவே புரதம் நிறைந்த உணவுகளில் குழந்தைக்கு எதையெல்லாம் தரலாம் என்று பார்க்கலாம்.

ஒரு கப் பாலில் 8 கிராம் புரதம் உள்ளது. பாக்கெட் பால் சுத்திகரிக்கப்படுவதால் கொழுப்பு, புரத அளவு மாறுபடலாம். எனவே பசும்பால் எருமைப் பால் இருந்தால் காய்ச்சி கொடுங்கள். அதேபோல் அதில் மற்ற பவுடர்கள் எதுவும் கலக்காமல் பால் மட்டும் கொடுத்தாலே நிறைவான புரதச்சத்தைப் பெறலாம்.

கிவி பழம், அத்திப்பழம், நாவல் பழம், பலாப்பழம், கொய்யா பழம் கொடுக்கலாம். பலாப்பழம் கொடுக்கும்போது அளவாகக் கொடுக்க வேண்டும். விரைவில் செரிமானம் ஆகாது. நன்கு பழுத்ததாக கொடுங்கள். மற்ற பழங்களையும் மசித்து ஊட்டலாம் அல்லது ஜூஸாக அரைத்து கொடுக்கலாம்.

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தினசரி உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இட்லி , தோசைக்கு சாம்பாரில் பருப்பு கூடுதலாக சேர்த்து ஊட்டுங்கள். அதேபோல் பாதாம், முந்திரி, வேர்க்கடலையும் கொடுக்கலாம். வேர்க்கடலையை அதிகம் தர வேண்டாம். செரிமானம் பாதிக்கும். இவற்றில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருப்பு வகையாகக் கொடுங்கள்.

பசலைக் கீரையில் புரதச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதை நன்கு வேக வைத்து குழைத்து சாதத்துடன் கலந்து ஊட்டுங்கள். அரை வேக்காட்டில் கொடுக்க வேண்டாம்.

முட்டையை நன்கு வேக வைத்து மசித்துக் கொடுக்க வேண்டும். மதிய உணவுக்கு முன் 10-11 மணி அளவில் வேக வைத்து தனியாக ஊட்டலாம்.

நன்கு வேக வைத்த மீனை முள் இல்லாமல் பார்த்து கவனமுடன் கொடுங்கள். இல்லையெனில் வயிற்றில் உபாதையை ஏற்படுத்தக் கூடும்.

கோழியை நன்கு வேக வைத்து கைகளில் மசித்துக் கொடுங்கள். குழந்தை அப்படியே விழுங்குகிறதா என்பதையும் கவனியுங்கள். ஏனெனில் விரைவில் ஜீரணிக்காது. உபாதையாகலாம். பிராய்லர் கோழியைவிட நாட்டுக்கோழி வாங்கி ஊட்டுவது நல்லது. கறியாக கொடுத்தால் சாப்பிடவில்லை எனில் வேக வைத்த தண்ணீரைக் கூட கொடுக்கலாம்.

தயிர் /நெய் இவை இரண்டிலும் போதுமான அளவு புரதச்சத்து உள்ளது. எனவே தயிர் சாதம் ஊட்டலாம். புளிக்காத தயிராக ஃபிரெஷாக இருக்க வேண்டும். நெய் சாதத்துடன் தினமும் சிறிதளவு பிசைந்து ஊட்டலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள உணவுகள் உங்கள் குழந்தைக்கு ஒத்துக்கொள்கிறதா அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா என பார்த்துவிட்டுக் கொடுங்கள். அதேபோல் குழந்தை அவற்றை சாப்பிடவில்லை எனில் அவர்கள் மறுக்காதவாறு வேறெந்த வழிகளில் கொடுக்கலாம் என சிந்தித்து சுவை கொண்டதாக ஊட்டிப் பாருங்கள்.
Tags:    

Similar News