ஆன்மிகம்
பண்ணாரி அம்மன் கோவில்

பக்தர்களை காத்து அருள்புரியும் பண்ணாரி அம்மன்

Published On 2021-04-02 01:28 GMT   |   Update On 2021-04-02 01:28 GMT
சத்தியமங்கலம் வனப்பகுதியின் நடுநாயகமாக சத்தியமங்கலம்- மைசூரு நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தாயாக விளங்குகிறார் பண்ணாரி அம்மன்.
சத்தியமங்கலம் வனப்பகுதியின் நடுநாயகமாக சத்தியமங்கலம்- மைசூரு நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கி அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தாயாக விளங்குகிறார் பண்ணாரி அம்மன். பண்ணாரி என்ற இந்த இடத்தில் குடிகொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களை கைத்தாங்கி காப்பாற்றும் மாரி அம்மனே, பண்ணாரி அம்மன் அல்லது பண்ணாரி மாரியம்மன் என்ற பெயர்கள் கொண்டு வீற்றிருக்கிறார். சுற்றிலும் அடர்ந்த காடாக இருக்கும் பண்ணாரியில் எப்போதும் யானைகள் நடமாட்டம் இருக்கும். ஆனால் எந்த காட்டு விலங்காலும் தனது பக்தர்களுக்கு தீங்கு நேராமல் காத்து வரும் அன்னையின் அருளே, பண்ணாரியின் பெருமை.

ஈரோடு மாவட்டத்தின் புகழ்பெற்ற புண்ணிய தலமாக பெயர் பெற்று விளங்குகிறது பண்ணாரி மாரியம்மன் கோவில். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சுயம்புவாய் தோன்றி, இன்று மக்கள் மனதில் குடியேறி இருக்கும் பண்ணாரி அம்மனின் அருளைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

பண்ணாரி அருகே உள்ள காட்டு ஆறு தோரணப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காட்டாற்றில் எப்போதும் வெள்ளம் ஓடிக்கொண்டு இருக்கும். அதுமட்டுமின்றி இந்த பகுதி மிகவும் அமைதி குடிகொள்ளும் பகுதியாகவும் இருந்து வந்தது. இதனால் பண்ணாரியின் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் மாடுகளை மேய்க்கும் பகுதியாக இந்த இடத்தை தேர்ந்து எடுத்து வைத்திருந்தனர்.

அப்படி மேய்ச்சலுக்கு வரும் பசுக்கள் தோரணபள்ளத்தில் தண்ணீர் குடிக்க செல்வது வழக்கம். மாடுகள் ஒருபுறம் தண்ணீர் குடித்துக்கொண்டு இருக்க, காட்டாற்றின் மறுகரையில் புலிகள் தண்ணீர் குடிக்கும் நிகழ்வுகள் நடக்கும். ஆனால், பசுக்களை கண்ட புலிகள் அவற்றை துரத்துவதோ, புலிகளை கண்ட பசுக்கள் மிரண்டு ஓடுவதோ இல்லை என்ற அளவுக்கு அமைதி குடிகொண்டு இருந்தது. இதனால் கிராம விவசாயிகள் காட்டுப்பகுதியாக இருந்தாலும் பண்ணாரி பகுதியினை மாட்டு தொழுவங்கள் போடும் பகுதியாக பயன்படுத்தினார்கள். மாடுகளை கவனிக்க வேலையாட்கள் இருந்தனர்.

அவர்கள் பசுக்களை பகல் பொழுதில் மேய்ச்சலுக்கு அழைத்துச்செல்வதும், மாலையில் தொழுவத்தில் அடைத்து பாதுகாப்பதுமாக இருந்தனர். கன்று ஈன்ற பசுக்களில் இருந்து பால் கறந்து கொண்டு சென்று அக்கம்பக்கத்து கிராமங்களில் விற்றும் வந்தனர். அதுமட்டுமின்றி இந்த பகுதி சத்தியமங்கலத்தில் இருந்து மைசூரு செல்ல குறுக்கு வழியாக இருந்ததால் வியாபாரிகள் நடைபயணமாகவும், வண்டிகள் கட்டிக்கொண்டும் பண்ணாரி வழியாக செல்வது உண்டு.

இப்படி சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள், பண்ணாரி பகுதியை ஒட்டிய ஒரு இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த தொழுவத்தில் காராம் பசு ஒன்று கன்று ஈன்றது. அந்த பசு மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. இதனால் அதிகம் பால் கறந்து விற்கலாம் என்று அந்த பசுவை கவனித்து வந்த வேலைக்காரர் நினைத்தார். ஆனால் அவர் பால் கறக்க அருகில் சென்று விட்டால் அவருக்கு பிடி கொடுத்ததே இல்லை. மற்ற நேரங்களில் எல்லாம் சாதுவாக இருக்கும் காராம்பசு பால் கறக்க சென்றால் மட்டும் அவரது கைக்கு பிடிபடாமல் சென்று விடும்.

கன்றுக்குட்டிக்கும் அது பால் கொடுப்பதில்லை என்பதை அவர் பார்த்து வியந்து போனார். இப்படி ஒரு பசுமாடு இருக்க முடியுமா என்று யோசனையில் இருந்தார். ஒருநாள் கன்றுக்குட்டி பசுவிடம் பால் குடிக்க ஓடிச்சென்றது. ஆனால், காராம் பசு, கன்றுக்குட்டியிடம் பிடி கொடுக்காமல் வேறு திசையில் ஓடியது. அதைப்பார்த்த வேலையாள் பசுவை பின்தொடர்ந்து சென்றார். வேகமாக ஓடிய பசு ஒரு இடத்தில் நின்றது. அதுவரை ஓடிய எந்த களைப்பும் இன்றி அது மிகவும் தெம்பாக அங்கு நின்று கொண்டிருப்பதை பார்த்த அவருக்கு இன்னும் ஆச்சரியம். எங்கேயோ காட்டுக்குள் ஓடி காட்டு விலங்குகளிடம் பசு சிக்கிவிடுமோ என்று பயந்த அவருக்கு பசு ஒரே இடத்தில் அமைதியாக நின்றதால் பிடித்து விடலாம் என்று அவரது மனமும் அமைதியானது.

திடீரென்று அவரது மனம் அமைதியானது. தெய்வீக தென்றல் அந்த பகுதியில் வீசுவதை உணர்ந்தார். அவரது பார்வை பசுவின் மீதே இருந்தது. பசு அங்கிருந்த ஒரு வேங்கை மரத்தின் அடியில் சென்றது. அங்கு காணாம்புற்கள் ஓங்கி வளர்ந்திருந்தது. அதனுள் பசு நடந்து சென்றது. பசு புல் சாப்பிடத்தான் வந்திருக்கும் என்று நினைத்த வேலையாள் அமைதியாக நடந்து அருகில் வந்தார். ஆனால் என்ன ஆச்சரியம், பால்கறக்க பிடி கொடுக்காத காராம்பசு அங்கு ஒரு இடத்தில் தன்னிச்சையாக பாலை சொரிந்து கொண்டிருந்தது. பால் முழுவதும் முடிந்த பின்னர் எதுவும் நடக்காதது போன்று பசு தொழுவத்தை வந்து சேர்ந்தது.

தினமும் பால் கறக்கும் நேரத்தில் பசு காட்டுக்குள் செல்வதும் அங்கு தனிமையான இடத்தில் பால் சொரிந்து கொண்டு தொழுவத்துக்கு திரும்புவதும் வாடிக்கையாக இருந்தது. இதனை வேலையாளும் தொடர்ந்து கண்காணித்து வந்தார். அதே நேரம் பசுமாட்டு பால் என்ன ஆனது என்று கேட்கும் முதலாளிக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்த அவர், உடனடியாக சென்று முதலாளியிடம் விவரத்தை கூறினார். ஆனால் அவருக்கு இது புதிய கதையாக இருந்தது. மேலும், வேலையாள் நம்பிக்கைக்கு உரியவர் என்பதால் அவரிடம் எதுவும் கேட்கவில்லை.

அவருக்கு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்ய வேண்டியது இருந்தது. எனவே வேலையாள் கூறிய இடத்துக்கு தனது அக்கம்பக்கத்தினரையும் அழைத்துக்கொண்டு சென்றார். அவர்கள் வேலையாள் சொன்ன இடத்தில் மறைந்து இருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் பசு காணாம்புற்கள் வளர்ந்து இருந்த இடத்துக்கு வந்து வழக்கம்போல பாலை சொரிந்து விட்டு புறப்பட்டது. ஆச்சரியம் நீங்காத முதலாளியும் உடன் வந்தவர்களும் அங்கே வந்து வளர்ந்து இருந்த காணாம்புற்களை அகற்றினார்கள். வேங்கை மரத்தின் அடிப்பகுதியில் பசு பால்சொரிந்த இடத்தில் புற்கள் அகற்றப்பட்டபோது பாலின் ஈரம் காயவில்லை. அங்கே ஒரு சுயம்புலிங்கம் தென்பட்டது. லிங்கத்தில் பசு சுரந்த பால் வழிந்தோடியது. அவர்கள் அதைப்பார்த்து வியந்து நிற்க, கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் திடீரென்று அருள்வாக்கு கூறினார்.

'நான்... கேரளாவில் உள்ள வண்ணார்காட்டில் இருந்து, மைசூர் செல்லும் மக்களின் பாதுகாப்புக்காக வந்தேன். இந்த இடத்தின் இயற்கை சூழல் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இனிமேல் நான் இங்கேயே நிரந்தரமாக தங்கிக்கொள்வேன்...' என்று அவர் அருள் வாக்கு உரைத்தார். அதைக்கேட்டு மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தார்கள். அம்மா தன்னை வெளிப்படுத்தவே பசுவின் மூலம் விளையாடல் செய்திருக்கிறார் என்று மகிழ்ந்தனர். பண்ணாரியில் வெளிப்பட்ட காரணத்தால் இந்த மாரியம்மனை பண்ணாரி மாரியம்மன் என்று அழைத்தனர். சுயம்பு அம்மனுக்கு காணாம்புற்களால் கூரை வேய்ந்து ஒரு சிறிய கோவிலை உருவாக்கினர் அந்த கிராம மக்கள். அன்று முதல் அம்மனுக்கு வழிபாடு தொடங்கியது. கிராம மக்கள் தவறாமல் வந்து அம்மனை வழிபட்டனர். குண்டம் திருவிழா நடத்தப்பட்டது. வேண்டிய வரங்களை எல்லாம் அள்ளிக்கொடுத்த பண்ணாரி அம்மன் புகழ் எங்கும் பரவியது.

தமிழகத்தின் பல பகுதிகளிலும் பண்ணாரி அம்மன் அருள் ஒளி பரவியது. கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கும் தெய்வமாக பண்ணாரி மாரியம்மன் உள்ளார். கேரளாவில் இருந்தும் பண்ணாரியம்மனை தரிசிக்க பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
Tags:    

Similar News