லைஃப்ஸ்டைல்
மஞ்சள் பூஞ்சை நோய்

எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களை மஞ்சள் பூஞ்சை நோய் தாக்கும்

Published On 2021-06-05 04:36 GMT   |   Update On 2021-06-05 04:36 GMT
வெள்ளைப் பூஞ்சை எனும் நோய் தாக்குதல் தற்போது நோயாளிகளிடம் கண்டறியப்பட்டு வருகிறது. அடுத்த சவாலாக மஞ்சள் பூஞ்சை நோய் பரவி வருகிறது.
கொரோனா நோயில் இருந்து மீண்டு வரும் நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் இந்தியாவில் காணப்பட்டு வருகிறது. புதுவையிலும் இந்த நோய்க்கு 20 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இந்தநிலையில் வெள்ளைப் பூஞ்சை எனும் நோய் தாக்குதல் தற்போது நோயாளிகளிடம் கண்டறியப்பட்டு வருகிறது. அடுத்த சவாலாக மஞ்சள் பூஞ்சை நோய் பரவி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத் நகரத்தை சார்ந்த 45 வயது கொரோனா நோயாளிக்கு இந்த நோய் முதல் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பரவி வரும் பூஞ்சை நோய்கள் மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

மஞ்சள் பூஞ்சை நோய் பாம்பு, பல்லி உள்ளிட்ட ஊர்வனவற்றுக்கே ஏற்படும். சுகாதாரமாக இல்லாததும், சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் மஞ்சள் பூஞ்சை நோய் ஏற்படலாம்.

இந்த நோய் தாக்கியவர்களுக்கு உடல் அசதி, பசியின்மை, திடீரென உடல் எடை குறைதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும். உள்உறுப்புகள் பாதித்து மஞ்சள் நிற சீழ் வைத்து ஆறாத புண்களாக மாறி மரணம் கூட ஏற்படலாம்.

சிறந்த சுகாதாரம், நல்ல நோய் எதிர்ப்பு சக்தியே பூஞ்சை நோய்களுக்கு எதிரான கவசம் ஆகும். மஞ்சள் பூஞ்சை நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும் சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அருண் கூறினார்.
Tags:    

Similar News