செய்திகள்
ஐகோர்ட்

டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? : தமிழக அரசுக்கு, ஐகோர்ட் கேள்வி

Published On 2020-11-05 12:27 GMT   |   Update On 2020-11-05 12:27 GMT
டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டங்களை கொரோனா பரவல் காரணமாக தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பதை குறிப்பிட்டு தமிழக அரசு ரத்து செய்தது. இதை எதிர்த்து, திமுக எம்எல்ஏ நேரு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

அவரது மனுவில், சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்குத் தேசிய அளவில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியதால், சட்டங்களுக்கு எதிராக கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றும் படி, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்ததால், தமிழக அரசு, கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி ஆண்டுக்கு இரண்டு முறை கிராமசபைக் கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும் என்பதால் மூன்று வாரங்களில் கிராமசபைக் கூட்டங்கள் கூட்டப்படுவதை உறுதி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், கிராமசபைக் கூட்டங்களை ரத்து செய்த உத்தரவைச் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தனிமனித விலகல் காரணமாக கிராமசபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது என்றால், டாஸ்மாக் கடைகளில் தனிமனித விலகல் பின்பற்றப்படுகிறதா எனக் கேள்வி எழுப்பினர்.

கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ரத்து செய்ய அதிகாரம் உள்ள நிலையில், குறிப்பிட்ட விவகாரம் பற்றித் தீர்மானம் நிறைவேற்றக் கூடாது எனக் கூற அரசுக்கு எங்கே அதிகாரம் உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மனுவுக்கு ஜனவரி 22-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

Similar News