ஆன்மிகம்
நம்பெருமாள் உப நாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளிய போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்: நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார்

Published On 2020-11-10 05:14 GMT   |   Update On 2020-11-10 05:14 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் நெல்லளவு கண்டருளினார். நாளை தீர்த்தவாரி நடக்கிறது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல்உற்சவம் 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 3-ந்தேதி தொடங்கி நாளை (11-ந் தேதி) வரை நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவத்தையொட்டி உற்சவர் நம்பெருமாள் தினமும் மாலையில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு தங்கக் கொடி மரத்திற்கு அருகில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி ஊஞ்சல் ஆடியவாறு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் மாலை 6.45 மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அதன்பின்னர், இரவு 8.15 மணிமுதல் இரவு 9.15 மணிவரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

விழாவின் நிறைவு நாளான நாளை நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் காலை 9.45 மணிக்கு தீர்த்தவாரி கண்டருளுவதுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News