உள்ளூர் செய்திகள்
பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திருப்பூர் மருத்துவக்கல்லூரியை திறந்து வைத்த காட்சி.

பல ஆண்டு கனவு நிறைவேறியது - திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு

Published On 2022-01-12 11:12 GMT   |   Update On 2022-01-12 11:12 GMT
புதிதாக கட்டப்பட்ட கல்லூரியில் உடற்கூராய்வு, உயிர் வேதியியல் மற்றும் உடல் இயக்கியல் உள்பட 25 துறைகள் உள்ளன.
திருப்பூர்:

திருப்பூரில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் ரூ.350 கோடி மதிப்பில் தாராபுரம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் 11.28 ஏக்கர் பரப்பளவில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு உள்ளது. இங்கு உடற்கூராய்வு, உயிர் வேதியியல் மற்றும் உடல் இயக்கியல் உள்பட 25 துறைகள் உள்ளன.

மருத்துவமனைக் கட்டிடங்கள் 4, கல்லூரி கட்டிடங்கள் 2 மற்றும் குடியிருப்புக் கட்டிடங்கள் 15 என மொத்தம் 21 கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இதில் மருத்துவமனை கட்டிட ங்கள் 6 தளங்களுடன் கட்டப்பட்டு உள்ளது.

இதில் 50 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, 500 படுக்கை வசதி, 12 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் நவீன ஆய்வகங்கள் உள்ளன. கல்லூரி கட்டிடங்களில் பயிலகக் கட்டிடங்கள் 7 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளன.

150 நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் வசதி, 8 துறை களுக்கான வகுப்பறை மற்றும் ஆய்வக வசதிகள், நூலக வசதிகள் மற்றும் 900 பேர் அமரக்கூடிய வகையில் கலையரங்க கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது.

குடியிருப்பு கட்டிடங்களில் கல்லூரி முதல்வர் குடியிருப்பு, நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் உதவி நிலைய மருத்துவ அலுவலர் குடியிருப்பு, மாணவ, மாணவிகள், செவிலியர் விடுதிகள்,  உடற்பயிற்சிக்கூடம் உட்பட பல்வேறு பிரிவுகளில் கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.

புதிய மருத்துவக்கல்லூரி நடப்பாண்டு முதல் செயல்பட உள்ள நிலையில் ஆட்கள் நிரப்பும் பணி முடிவடைந்துள்ளது. 

அதன்படி பேராசிரியர்கள் 2 பேர், இணை பேராசிரியர்கள் 12 பேர், உதவி பேராசிரியர்கள் 28 பேர், முதுநிலை உள்ளிருப்பு மருத்துவர் 19 பேர், இளநிலை உள்ளிருப்பு மருத்துவர் 27 பேர், ஆசிரியர்கள் 14 மற்றும் உதவி அறுவை சிகிச்சையாளர் 40 பேர் என மொத்தம் 146 பேர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இதுதவிர அலுவலக பணிக்கு இளநிலை உதவியாளர், அலுவலக ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் என பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த மருத்துவக்கல்லூரி மூலம் ஆண்டுக்கு 150 டாக்டர்கள் வீதம் 5 ஆண்டுக்கு 750 டாக்டர்கள் உருவாவார்கள். நடப்பாண்டில் 100 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். 

புதிதாக கட்டப்பட்ட திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, மீன் வளம், கால்நடை பராமரிப்பு துறை இணை மந்திரி எல்.முருகன், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிசெல்வராஜ் மற்றும் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்புராயன், திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் மற்றும் கலெக்டர் வினீத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூரில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென பெற்றோர் மற்றும் மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். தற்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News