செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம்- 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை

Published On 2021-10-08 04:23 GMT   |   Update On 2021-10-08 04:23 GMT
புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.50 நிவாரணம் 30 நாட்களுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரியில் கொரோனாவால் இறந்த குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக வழிகாட்டுதல்களை உருவாக்கி உள்ளது. இந்த நிவாரணத் தொகையானது மாநில பேரிடர் நிதியில் இருந்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் வழங்கும்.

மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களின் அனைத்து உரிமைக்கோரல்களையும் சமர்ப்பிக்கும் தேவையான விண்ணப்பத்தை தகுந்த ஆவணங்களுடன் சமர்ப்பித்த 30 நாட்களுக்குள் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான விண்ணப்ப வினியோகமும் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக புதுச்சேரி மண்டலத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமையில் இறப்பு சான்றிதழ் தொடர்பாக கொரோனா இறப்பு கண்டறியும் குழுவும், குறைதீர்க்கும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவின் உறுப்பினர்களாக கோரிமேடு அரசு மருந்தக தலைவர் ரமேஷ், ஜிப்மர் இணை பேராசிரியர் கவிதா, பேராசிரியர் விவேகானந்தன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க் தலைமையில் சப்-கலெக்டர்கள் கந்தசாமி (வடக்கு), ரிஷித்தா குப்தா (தெற்கு), கொரோனா இறப்பு கண்டறியும் குழு உறுப்பினர்கள், சுகாதார மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் நிவாரண தொகை பெறுவதற்கான செயல்முறை, விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் உரிமைக்கோரல்களை தீர்ப்பதற்கான வலுவான மற்றும் எளிமையான நடைமுறை, விண்ணப்பங்கள் சரிபார்ப்பு, இறுதி வினியோகம் பற்றி விவாதிக்கப்பட்டது.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இறப்பு சான்றிதழ் தொடர்பாக ஏதேனும் குறைகள் இருந்தால் விண்ணப்பதாரர்கள் கோரிமேடு அரசு மருந்தக தலைவர் ரமேஷ் (9443215450), உரிமைகோரல் செயல்முறை தொடர்பான வேறு ஏதேனும் குறைகளுக்கு துணை தாசில்தார் தமிழ்செல்வன் (9442485185) மற்றும் பேரிடம் மேலாண்மை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வாகார்க் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News