செய்திகள்
தங்கம்

தங்கம் கையிருப்பின் மதிப்பு 896 கோடி திர்ஹாமாக உயர்வு- அமீரக மத்திய வங்கி புள்ளி விவரம் வெளியீடு

Published On 2020-11-21 03:20 GMT   |   Update On 2020-11-21 03:20 GMT
அமீரக மத்திய வங்கியில் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு 896.1 கோடி திர்ஹாமாக உயர்ந்துள்ளது.
அபுதாபி:

அமீரக மத்திய வங்கி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஐக்கிய அரபு நாடுகள் ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு கடந்த 1973-ம் ஆண்டில் அமீரக திர்ஹாம் என்ற பணமதிப்பு உருவாக்கப்பட்டது. இந்த பணம் மற்றும் பணப்பரிமாற்றம் என அனைத்து செயல்பாடுகளையும் நிர்வகிக்க அமீரக அரசால் ஏற்படுத்தப்பட்டதுதான் மத்திய வங்கியாகும். இந்த வங்கியின் மூலமாகவே அமீரகத்தின் திர்ஹாம் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் அனைத்தும் அச்சிடப்பட்டு வெளியிடப்படுகிறது.

மத்திய வங்கியானது பணமதிப்பை ஆய்வு செய்வது, புள்ளி விவரங்களை வைத்திருப்பது, நிதி மோசடி கண்காணிப்பு, பண மதிப்பு நிர்ணயம் மற்றும் தங்கத்தை கையிருப்பு வைப்பது, வங்கிகளை கண்காணிப்பது, வங்கிகளில் உள்ள செயல்பாடுகள் மற்றும் பணம் பெறும் முறைகளை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளை செய்து வருகிறது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் பண மதிப்பானது தங்கத்தின் கையிருப்பை கொண்டுதான் கணக்கிடப்படுகின்றது.

அமீரகம் உள்பட ஒவ்வொரு நாட்டிலும் அந்நிய செலாவணியை நிர்ணயம் செய்வது அந்த நாட்டில் உள்ள தங்கம் கையிருப்பாகும். அமெரிக்காவின் டாலர் மதிப்பு அதிகமாக உள்ளது என்றால் அங்குள்ள மத்திய வங்கியில் தங்கம் கையிருப்பு மதிப்பு அதிகமாக இருப்பதே காரணமாகும். அமீரகத்தில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் மத்திய வங்கியானது, உலக தங்க கவுன்சில் பட்டியலில் இருந்து விடுபட்ட பிறகு தங்கம் கையிருப்பு மதிப்பு நிலவரத்தை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் 3 மாதங்களில் 595.1 கோடி திர்ஹாமாக இருந்த தங்கம் கையிருப்பின் மதிப்பு அடுத்த 6 மாதங்களில் 658 கோடி திர்ஹாமாக சரிந்தது. அதற்கு அடுத்து கடந்த ஜூலை மாத முடிவில் 846.2 கோடி திர்ஹாமாக உயர்ந்தது. தற்போது செப்டம்பர் மாதம் இறுதியில் 896.1 கோடி திர்ஹாமாக உள்ளது. தற்போது உள்ள நிலவரப்படி படிப்படியாக மத்திய வங்கியின் தங்கம் கையிருப்பு மதிப்பு உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியானது கடந்த 2019-ம் ஆண்டை விட 121 சதவீதம் கூடுதலாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News