செய்திகள்

இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு 16 ஆயிரம் போலீசார் - தலைமை தேர்தல் அதிகாரி

Published On 2019-05-17 18:47 GMT   |   Update On 2019-05-17 18:47 GMT
இடைத்தேர்தல் நடை பெறும் 4 தொகுதிகளிலும் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
சென்னை:

தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

இடைத்தேர்தல் நடக்கவுள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5,508 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒருவர் என்ற வீதத்தில் 1,364 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

மத்திய அரசின் முகமைகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் நுண்பார்வையாளர்களாக இருப்பார்கள். அவர்கள் பொதுப் பார்வையாளர்களின் கீழ் செயல்படுவார்கள்.

மேலும், 4 தொகுதிகளிலும் மொத்தம் 15 ஆயிரத்து 939 போலீசார் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட உள்ளனர். இது மிக அதிக பாதுகாப்பாக இருக்கும். எனவே எந்தவித சட்டம்-ஒழுங்கு பிரச்சினையையும் எதிர்கொள்ள முடியும். அதோடு மத்திய ஆயுத போலீஸ் படையினர் 1,300 பேர் இருப்பார்கள்.



மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் பேசியது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபற்றி அரசியல் கட்சியினரும் புகார் மனு அளித்துள்ளனர். இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளோம். அந்த அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது மக்கள் நீதி மய்யம் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபற்றியும் மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கை பெற உள்ளோம். அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்.

பொன்பரப்பியில் நடந்த சம்பவம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. எனவே இதில் நான் கருத்து கூற முடியாது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் என்னை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அதுபோல தபால் ஓட்டுகள் தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எல்லா தபால் ஓட்டுகளும் சரியான முறையில்தான் வழங்கப்பட்டுள்ளன. இதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள்தான் நிர்வகிப்பார்கள்.

போலீசுக்கான தபால் ஓட்டுகள் 100 சதவீதம் வழங்கப்பட்டு விட்டன.

ஓட்டு எண்ணிக்கையின்போது முதல் ரவுண்டு முடிவுகளை எத்தனை மணிக்கு எதிர்பார்க்கலாம்? என்ற கேள்விக்கு இப்போதே நான் பதிலளிக்க முடியாது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 ஒப்புகைச் சீட்டு எந்திரம் (‘விவிபாட்’) என்ற வகையில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் (6 சட்டமன்றங்களை உள்ளடக்கிய தொகுதி என்றால்) 30 ‘விவிபாட்’ எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும்.

ஒவ்வொரு ‘விவிபாட்’ எந்திரத்துக்கும் எண் இருக்கும். குலுக்கல் முறையில் அதில் 5 எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீட்டுகள் எண்ணப்படும். இந்த தேர்வை வீடியோ படம் எடுப்பார்கள். எனவே ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகலாம். வாக்குப் பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியில்தான் விவிபாட் எந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும். 23-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News