செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம்

ஓபிஎஸ், இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு -புகழேந்தி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

Published On 2021-08-27 10:02 GMT   |   Update On 2021-08-27 10:02 GMT
கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகவும், களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் நடந்து கொண்டதாக கூறி புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு எதிராக சென்னை சிறப்பு கோர்ட்டில் அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி புகழேந்தி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரை கட்சியில் இருந்து நீக்கியபோது இவர்கள் இருவரும் வெளியிட்ட அறிக்கையில் கூறிய கருத்து தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி இருப்பதாக புகழேந்தி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை செப்டம்பர் 13-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று இருவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.



இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எம். நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல்கள் விஜய் நாராயணன் நடராஜன் ஆகியோர் ஆஜராகினர். அவர்கள் தங்கள் வாதத்தில் கூறியதாவது:-

தவறு செய்த ஒரு ஊழியரை நீக்கியதற்காக ஒரு தனியார் நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர முடியுமா? அப்படி யாராவது அவதூறு வழக்கு தொடர முடியுமென்றால் ஆயிரக்கணக்கான அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கும்.

கட்சியின் கொள்கைகளுக்கு எதிராகவும், களங்கம் ஏற்படுத்தும் நோக்கிலும் நடந்து கொண்டதால் புகழேந்தி நீக்கப்பட்டார். கட்சியின் உறுப்பினர்களுக்கு ஒருவர் நீக்கப்பட்டால் அதனை பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் தெரிவிக்க வேண்டியது கட்டாயம்.

பொதுமக்களை அவருடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என நாங்கள் கூறவில்லை, எங்கள் கட்சிகாரர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுகிறோம். இதில் அவதூறுக்கு என்ன இருக்கிறது? எனவே அவதூறு வழக்கிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

புகாரில் அவதூறுக்கான எந்த சாராம்சமும் இல்லை. ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர் கட்சியின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்பது விதி. புகார்தாரர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக நடந்து கொண்டதால் அவரை கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டனர்.

ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கு ஒருவரை கட்சியில் இருந்து நீக்கவும் முழு அதிகாரம் உள்ளது. கட்சியில் இருக்கும் ஒருவரை புகாரின் அடிப்படையில் கட்சியை விட்டு நீக்கினால் அது அவதூறு ஆகாது.

அவரை கட்சியில் இருந்து நீக்குவது முதல் முறையல்ல. 25.12.17 அப்போதும் இதே போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி தான் அவர் வெளியேற்றப்பட்டார்.

இவ்வாறு இருவரும் வாதிட்டனர்.

இதையடுத்து புகழேந்தி தரப்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டார். அனைத்து தரப்பு வாதங்களை தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 13-ந் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி,புகழேந்தி தரப்பை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News