ஆன்மிகம்
திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவில்

திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவில்

Published On 2019-09-24 01:32 GMT   |   Update On 2019-09-24 01:32 GMT
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ளது திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் காவிரி நதியின் வட கரையில் ஒருபகுதியாக அமைந்துள்ளது திருவிழந்தூர். இதன் புராணப் பெயர் திருஇந்தளுர்.  கன்னித் தமிழ்பாடி இறைவனை வாழ்த்திய ஆழ்வார்கள் பலர் வாழ்ந்த தமிழ்த் திருநாட்டில் கங்கையை போல் புனிதமாகிய காவிரி கரையில் அமைந்த வைணவத் தலங்கள் பலவற்றுள் 5 அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன.

அவைகள் முறையே திருவரங்க பட்டணம் (மைசூரில் உள்ளது), திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), அப்பால ரங்கம் (கோவிலடி), கும்பகோணம் மத்தியரங்கம், திருஇந்தளுர் பரிமளரங்கம் என்பன திருஇந்தளுர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் பாஞ்சராத்திர ஆகமத்தைச் சேர்ந்தது.

இத்தலம் சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக் காடுகள் நிறைந்திருந்ததால் சுகந்த வனம் என்ற பெயரும் உண்டு. இந்து என்ற சொல் இந்திரனைக் குறிக்கும். தட்சனின் சாபத்தால் சந்திரனுக்கு கொடிய நோய் தோன்றவே அவன் இவ்வூரை அடைந்து இத்தலத்து எம்பெருமானின் அருளால் நோய் நீங்கப்பெற்றான்.
அதனால்தான் அதன் நினைவாக இந்த ஊருக்கு இந்துபுரி என்றும், தான் தவம் புரிந்த திருத்தலத்தை இந்துபுஷ்கரணி என்றும் வழங்குமாறு இறைவனிடம் வேண்டியுள்ளதால் இப்பெயர்கள் அமைந்துள்ளன.

பிரம்ம தேவனால் வெளியிடப்பட்ட வேதங்களை மதுகைடபர்கள் என்னும் அரக்கர்கள் அபகரித்துப் போக, பிரம்மா மிகவும் வருந்தி எம்பெருமானை வேண்டியுள்ளதால் பெருமாள் அந்த வேதங்களை அரக்கர்களிடமிருந்து மீட்டு வேதங்களுக்கு பரிமளத்தை கொடுத்தமையால் இறைவன் பரிமள ரெங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

சந்திரன், பங்குனி மாதம் எம்பெருமானுக்கு பிரம்மோத்ஸவம் செய்வித்தப் படியால் இன்றும் பங்குனியில் பிரம்மோத்சவம் நடை பெறுகிறது. துலா (ஐப்பசி) மாதத்தில் காவிரியில் நீராடினால் கங்கையை விட அதிகப் புண்ணியம் வாய்ந்தது என வரலாறு கூறுகிறது. இதன் காரணமாகவே துலா பிரம்மோத்சவம் நடைபெறுகிறது.

திருமங்கை மன்னன் தன் குழுவினருடன் பெருமாளை தரிசிக்க வந்தனர். அப்போது சன்னதி கதவுகள் திறக்கப்படவில்லை. பெருமாளும் அவருக்கு காட்சி அளிக்கவில்லை. ஆழ்வார் எவ்வளவு வேண்டியும் பெருமாள் முகம் கொடுக்கவில்லை. இதனால் ஆழ்வார் மிகவும் வருந்தி மிதமிஞ்சிய பக்தியினால் பாடியுள்ளார் (இதை நிந்தா ஸ்துதி என்பவர்) இதன் பின் பெருமாள் காட்சி கொடுத்தார், திருமங்கையாழ்வார் அருளிச்செய்த 9-ம் திருமொழியின் திருவிந்தளுர் பாசுரங்கள் பத்தில் விவரமாக காணலாம்.

இறைவனது திருமேனி மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த பச்சை மரகதத் திருமேனியாக காண்போர் கண்ணையும் கருத்தையும் கவருவதாக அமைந்துள்ளது. இத்தலத்தை சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக் காடுகள் நிறைந்திருந்ததால் இவற்றின் நறுமணம் வீசுகிறது. இதனால் பெருமாளுக்கு சுகந்தவன நாதர் என்று மற்றொர் பெயரும் பெருமாளுக்கு உண்டு.

மூலஸ்தான பரிமள ரெங்கநாதரின் முகாரவிந்தத்தில் சூரியனாலும், பாதாரவிந்தத்தில் சந்திரனாலும், நாபிக்கமலத்தில் பிரம்மாவினாலும் பூஜிக்கப்படுகிறார்கள். தென்புறத்தில் காவிரி தாயாரும், வடபுறத்தில் கங்கை தாயாரும் ஆராதிக் கிறார்கள். இமயனும், அம்பரிஷனும் எம்பெருமான் திருவடிகளை அர்ச்சிக்கின்றனர். உத்சவப்பெருமாள் உபய நாச்சியாருடன் சீரிய சிம்மாசனத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. தாயாரின் திருப்பெயர்கள் பரிமள ரங்கநாயகி, சுகந்தவனநாயகி,புண்டரீகவல்லி,ஸ்ரீசந்திரசாபவிமோசனவல்லி. பரிமள ரங்கநாதரின் தெற்குபக்கத்தில் ஸ்ரீசக்கரத் தாழ்வாருக்கு தனிச்சன்னதி உள்ளது. ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு தனியாக சன்னதி உள்ளது. மிகுந்த வரப்பிரசாதி சன்னதி வெளியில் கீழவீதியில் உள்ளது. கடல் கடந்து சீதாப் பிராட்டியாரைக்கண்டு ராமனது துயர் நீக்கிய மகாவீரனான இவர் தன்னை அண்டினோரின் துயர் தீர அருள்புரிகிறார். இவருக்கு திரு மஞ்சனம் இல்லாத நாளே இல்லை.

முக்கிய திருவிழாக்கள்

சித்திரை மாதப்பிறப்பு பெருமாள் வீதிப்புறப்பாடு, ஆடிமாதம்- ஆண்டாள் ஆடிப்பூர உத்சவம் 10 நாட்கள், ஆவணி மாதம் ஜெயந்தி கண்ணன் புறப்பாடு உறியடி உத்சவம், பவுத்திர உற்சவம் 5 நாட்கள். கடைசி நாள் கருட வேவை.

புரட்டாசி மாதம்

தாயார் நவராத்திரி உற்சவம், விஜயதசமியன்று பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்புபோடுதல்.

ஐப்பசி மாதம்:-

மாதப்பிறப்பு, அமாவாசை ஆகிய இரண்டு தினங் களில் கருடசேவை, 22-ந் தேதியில் இருந்து துலா பிரம்மோத்சவம் 10 நாட்கள். 4-ம் திருநாள் கருடசேவை, 7-ம்திருநாள் திருக் கல்யாணம், 8-ம் திருநாள் வெண்ணைத்தாழி, 9-ம் திருநாள் தேரோட்டம்.

கார்த்திகை மாதம்:-

திருக்கார்த்திகை சொக்கபனை உற்சவம்.

மார்கழி மாதம்:-


அத்யயன உத்சவம்-வைகுண்ட ஏகாதசி உற்சவம், பகல்பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி உத்சவம் 20 நாட்கள் நடைபெறும். பகல்பத்து உற்சவம்-வைகுண்ட ஏகாதசிக்கு முன்பாக 10 நாட்கள் நடை பெறும். இந்த நாட்களில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 2000 பாசுரங்கள் ஓதப்படும். 10-ம் நாள் பெருமாளுக்கு மோகினி அலங்காரம் ராப்பந்து உற்சவம் வைகுண்ட ஏகாதசியன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். பகல் பத்தில் பிரபந்தப் பாகரங்கள் இரண்டாயிரம் ஓதியது போக பாக்கியுள்ள 2000 பாசுரங்களும் 10 நாட்களில் ஓதப்படும். மார்கழி மாதம் 30 நாட்களிலும் விடியற்காலை தனுர் மாத பூஜை நடைபெறும்.

தை மாதம்:-

1-ம் நாள் சங்கராந்தி உற்சவம், 2-ம் நாள் காலை தாயார் உற்சவம், மாலை குதிரை வாகனம் புறப்பாடு, பரிவேட்டை, 3-ம் நாள் மட்டையடி உத்சவம் தாயார் அத்யான உத்சவம்.

மாசி மாதம்:-

மாசிமக உற்சவம், பெருமாள் காவேரி பூம்பட்டினம் சென்று சமுத்திர தீர்த்தவாரி.

பங்குனி உற்சவம்:-

பங்குனி பிரம்மோத்சவம்


10 நாட்கள். உத்திரத்திற்கு தீர்த்தவாரி, 4-ம் திருநாள் கருட சேவை, 7-ம் திருநாள் திருக்கல்யாணம், 9-ம் திருநாள் திருத்தேர். திருவிழா முடிந்ததும் 5-ம் நாள் ஊஞ்சல் உற்சவம். ஸ்ரீபெருமாள் நட்சத்திரம் உத்திரம். உத்திர தினத்தன்று புனுகு தைலம் (புனுகுசட்டம்). சந்தனாதி தைலம். ஜவ்வாது, மனோரஞ்சிதம், சண்பகப்பூ. சம்மங்கி, மல்லிகை, சந்தன முல்லை, ஜாதி சந்தன முல்லை, பவள மல்லி, துளசி இந்தப் பூக்களை கொண்டு அர்ச்சனை செய்து பக்தர்கள் பெருமாளின் அருள் பெறலாம்.

கோவில் வழிபாடு முறை

முதலில் துஜஸ்தம்பத்தில் (கொடிமரம்) நமஸ்காரம் செய்துவிட்டு அப்படியே ஸ்ரீராமர் சன்னதி சென்று பெரிய பிரகாரம் சென்று ஸ்ரீ ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வைகுண்ட ஏகாதசி மண்டபம் வழியாக துஜஸ்தம்பம் வழியாக பிரதட்சனமாக கருடனை தரிசித்து பிறகு கட்டகோபுரம் சென்று துவாரபாலகர் முன்பு வணங்கிவிட்டு ஆழ்வார் சன்னதி சென்று தரிசித்துவிட்டு சக்கரத்தாழ்வார் சன்னதி தரிசித்து பிறகு பன்னீர் மரத்தடியில் பெருமாள் விமான (வேதாமோத விமானம்) சேவித்த பிறகு ஸ்ரீபரிமளரங்க நாயகியை தரிசித்து உட்பிரகாரம் சென்று ஸ்ரீ ஆண்டாள்,  ஸ்ரீ சேனை முதலியார், ஸ்ரீ நரசிம்மன், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன் சேவித்துவிட்டு துவார பாலகர்கள் சேவித்து பிறகு ஸ்ரீபரிமள ரெங்கனை சேவிக்க வேண்டும்.

புரட்டாசி வழிபாடுகள்

திரு இந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும். குறிப்பாக புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. இதனால் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
புரட்டாசி மாதத்தில் தாயார் நவராத்திரி உற்சவம், விஜய தசமியன்று பெருமாள் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்புபோடுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். மிகவும் பிரசித்திபெற்ற இந்த விழாக்களில் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். மேலும் புரட்டாசி சனிக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வழிபாட்டில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

பாவம் போக்கும் ஆலயம்


சந்திரனுக்கு மற்ற தலங்களில் பாவ விமோசனம் கிடைத்தாலும் திருப்தி அடையவில்லை. தன் மீது எந்த சாபமும் ஒட்டியிருக்கக் கூடாது. என்றெண்ணி தாயாரான புண்டரீக வல்லியிடம் தன் வேண்டுகோளைச் சொல்ல பெருமாளும் தாயாரும் சேர்ந்து சந்திரன் மனக்குறையை போக்கியதாகச் சொல்கிறார்கள்.
இதனால்தான் இங்குள்ள தாயாருக்கு சந்திரபாப விமோசனவல்லி என்ற பெயர் ஏற்பட்டது. பெண் வாரிசு பிறக்கவில்லையே என்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து சாந்தி செய்தால் குறை விலகிவிடும். மற்ற தலத்திற்குச் சென்றும் - பாபம் தீரவில்லை என்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து தங்களது பாபம், தங்கள் குடும்பத்தின் பாவம், முன்னோர்கள் செய்த பாபம் அனைத்தையும் விலக்கிக் கொள்ள முடியும்.
Tags:    

Similar News