ஆன்மிகம்
ஆன்மிக கதை

வாழ்க்கைக்கான அறிவுரை- ஆன்மிக கதை

Published On 2021-10-30 08:50 GMT   |   Update On 2021-10-30 08:50 GMT
நம்மால் முடிந்த பிரச்சினைகளை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கையில் ஒப்படைத்துவிட்டு, உனக்கான அடுத்த பணிகளைச் செய். நிம்மதி தானாக வரும்.
முனிவரைப் பார்ப்பதற்காக வந்திருந்தான், அந்த இளைஞன். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவன், தன் வாழ்வில் அடிக்கடி சில பிரச்சினைகளை சந்தித்துக் கொண்டே இருந்தான். அதனால் மனஉளைச்சலுக்கு ஆளானவன், தீர்வு வேண்டி முனிவரிடம் வந்திருந்தான்.

“சுவாமி.. தொடர் பிரச்சினைகளால் என் மனம் பலகீனம் அடைந்துள்ளது. என்னால் சரியாக தூங்கக்கூட முடியவில்லை. என் வாழ்வில் பிரச்சினைகளே வராமல் இருக்க வழி சொல்லுங்கள்” என்றான்.

“இங்குள்ள தோட்டத்தில் 100 ஒட்டகங்கள் உள்ளன. அவை என்ன செய்கின்றன என்று பார்த்துவிட்டு வா” என்றார், முனிவர்.

‘பிரச்சினைக்கு தீர்வு கேட்டால், வேலை வாங்குகிறாரே இந்த முனிவர்’ என்று நினைத்தபடியே ஒட்டகங்கள் இருந்த இத்திற்குச் சென்று திரும்பினான்.

வந்ததும், “சுவாமி.. 100 ஒட்டகங்களும் நின்று கொண்டு இருக்கின்றன” என்றான்.

அதற்கு முனிவர், “சரி.. அந்த ஒட்டகங்கள் அனைத்தும் தரையில் படுத்தவுடன், அங்குள்ள ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு, காலையில் திரும்பி வா” என்று அனுப்பிவைத்தார், முனிவர்.

காலையில் கண்களில் களைப்புடன் திரும்பி வந்தவனிடம் “என்ன நடந்தது?” எனக் கேட்டார் முனிவர்.

அதற்கு அந்த இளைஞன், “சுவாமி.. இரவு முழுவதும் நான் தூங்கவில்லை. சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன. மற்றவைகளை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன். ஆனால் அதற்குள் வேறு சில ஒட்டகங்கள் எழுந்துவிட்டன. இப்படியே மாறி மாறி நடந்ததால், என்னால் தூங்கச் செல்ல முடியவில்லை” என்று பதிலளித்தான்.

முனிவர் சிரித்தபடியே, “வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளும் அப்படித்தான். சில பிரச்சினைகள் தானாகவே முடிந்துவிடும். சிலவற்றை நாம்தான் முடிக்க வேண்டும். ஆனால் ஒரு பிரச்சினை முடிந்தால் வேறு சில பிரச்சினைகள் எழத்தான் செய்யும். அனைத்து பிரச்சினைகளும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால், இந்த உலகத்தில் யாராலும் தூங்க முடியாது.

நம்மால் முடிந்த பிரச்சினைகளை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கையில் ஒப்படைத்துவிட்டு, உனக்கான அடுத்த பணிகளைச் செய். நிம்மதி தானாக வரும்” என்றார், முனிவர்.

மனம் தெளிந்து வீடு திரும்பினான், இளைஞன்.
Tags:    

Similar News