செய்திகள்
எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர் செல்வம்

அதிமுக பொதுக்குழு எப்போது?- இன்று மாலை ஆலோசனை

Published On 2020-12-20 03:28 GMT   |   Update On 2020-12-20 09:33 GMT
அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவது குறித்து சென்னையில் இன்று மாலை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை:

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஆண்டுக்கு ஒரு முறை கூடுவது வழக்கம்.

அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ந்தேதி நடைபெற்றது.

அதன் பிறகு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொதுக்குழு கூட்டப்படாமல் இருந்தது.

தற்போது திறந்தவெளியில் கூட்டங்கள் நடத்துவதற்கு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் கட்சி கூட்டங்கள் நடத்துவதற்கு ஏற்ற சூழல் உருவாகி உள்ளது.

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

அப்போது பொங்கல் பரிசாக ஒவ்வொரு அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.2,500 வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னை திரும்பி உள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று மாலை 5 மணியளவில் கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டம் முடிந்ததும் அனைவரும் ராயபேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு வருகிறார்கள். அங்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் இருவரும் கட்சி விசயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்துகிறார்கள்.

அப்போது அ.தி.மு.க. பொதுக்குழுவை எந்த தேதியில் கூட்டலாம் என்பது குறித்து விவாதிக்கிறார்கள். இந்த மாதத்துக்குள் பொதுக் குழுவை கூட்ட முடியுமா? அல்லது ஜனவரி முதல் வாரத்தில் பொதுக்குழுவை நடத்தலாமா? என்பது குறித்து முடிவு செய்கிறார்கள்.

அ.தி.மு.க. பொதுக் குழுவில் சுமார் 3,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்பதால் திருமண மண்டபத்தில் பொதுக் குழுவை கூட்டுவதா? அல்லது திறந்த வெளி மைதானத்தில் பந்தல் அமைத்து பொதுக்குழுவை நடத்துவதா? என்பது குறித்தும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்துகிறார்கள்.

இதுபற்றி கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடமும் கருத்துக்களை கேட்டு அறிகிறார்கள்.

அதன் பிறகு பொதுக்குழு கூடும் தேதியை முடிவு செய்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக இன்று அல்லது நாளை பொதுக்குழு கூடும் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருப்பதால் கூட்டணிகள் குறித்து முடிவு செய்வதற்கும் மற்றும் பல்வேறு அரசியல் வியூகங்கள் வகுப்பதற்கும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் விரிவாக ஆலோசனை நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது குறித்தும், இன்றைய கூட்டத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இருவரும் விரிவாக விவாதிப்பார்கள் என தெரிகிறது.
Tags:    

Similar News