செய்திகள்
மத்திய உள்துறை மந்திரி அமித் ‌ஷா

இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் - அமித் ‌ஷா வலியுறுத்தல்

Published On 2019-10-17 22:07 GMT   |   Update On 2019-10-17 22:07 GMT
இந்திய கண்ணோட்டத்தில் இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று அமித் ‌ஷா வலியுறுத்தினார்.
வாரணாசி:

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் குப்த பேரரசர் ஸ்கந்தகுப்த விக்ரமாதித்தன் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இதை மத்திய உள்துறை மந்திரி அமித் ‌ஷா தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இங்கு மேடையிலும், பார்வையாளர்கள் வரிசையிலும் திறமையான வரலாற்று அறிஞர்கள் உள்ளனர். உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்திய வரலாற்றை இந்தியாவின் கண்ணோட்டத்தில் மாற்றி எழுத வேண்டியது அவசியம். யார் மீதும் பழி போடாமல் எழுத வேண்டும்.

நமது வரலாற்றை எழுத வேண்டியது நமது பொறுப்பு. எத்தனை காலத்துக்கு ஆங்கிலேயர்களையே குற்றம் சாட்டிக்கொண்டிருக்க போகிறோம்? யார் மீதும் பழி சுமத்த வேண்டியது இல்லை. உண்மை என்னவோ, அதை மட்டும் எழுதுங்கள். அது காலம் கடந்தும் நிற்கும்.

1857-ம் ஆண்டு முதலாவது இந்திய சுதந்திர போர் நடைபெற்றது. வீர சாவர்க்கர்தான், அதற்கு ‘முதலாவது இந்திய சுதந்திர போர்‘ என்று பெயர் வைத்தார். அவர் இல்லாவிட்டால், அந்த போர், வரலாறு ஆகி இருக்காது. ஆங்கிலேயர்கள் பார்வையில், அதை வெறும் கலவரமாக நாம் பார்த்திருப்போம். நமது குழந்தைகள் அப்படித்தான் அதை படித்திருப்பார்கள்.

பிரதமர் மோடியால்தான், உலகஅளவில் இந்தியாவின் மரியாதை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையில், இந்தியாவின் மரியாதை அதிகரித்துள்ளது.நமது கருத்துகளை உலகம் கவனிக்கிறது. சர்வதேச நிலவரம் குறித்து நமது பிரதமர் பேசும்போது உலகம் கவனிக்கிறது. இவ்வாறு அமித் ‌ஷா பேசினார்.
Tags:    

Similar News