செய்திகள்
ஓ பன்னீர்செல்வம்

ஓ.பி.எஸ். விழாவில் ஹெலிகேம் பறந்த விவகாரம்- விளக்கம் கேட்கும் கேரள வனத்துறை

Published On 2019-08-31 07:38 GMT   |   Update On 2019-08-31 07:38 GMT
துணை முதல்வர் ஓ.பி.எஸ். பங்கேற்ற விழாவில் ஹெலிகேம் பறந்தது தொடர்பாக தமிழக அதிகாரிகளிடம் கேரள வனத்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கூடலூர்:

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. தேக்கடி ‌ஷட்டர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு ‌ஷட்டரை இயக்கி வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத்குமார், ஜக்கையன் எம்.எல்.ஏ., கலெக்டர் பல்லவி பல்தேவ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சி நடைபெற்ற போது ட்ரோன் எனப்படும் ஹெலிகேம் பறக்க விடப்பட்டு நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டது. இந்த இடம் பாதுகாக்கப்பட்ட பெரியாறு புலிகள் சரணாலய பகுதி ஆகும். மேலும் இது முல்லைப் பெரியாறு அணையின் ஒரு பகுதியாக உள்ளதால் இங்கு புகைப்படம் எடுக்கவோ, ஒளிப்பதிவு செய்யவோ அனுமதி இல்லை. கேரள காவல் துறை மற்றும் வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற பின்பே படம் எடுக்க வேண்டும்.


இவ்வாறு உள்ள நிலையில் துணை முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ஹெலிகேம் மூலம் நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துணை முதல்வரின் பாதுகாப்பை கருதி ஹெலிகேம் பயன்படுத்தி இருந்தாலும், பெரியாறு புலிகள் சரணாலயத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என சரணாலய இயக்குனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனவே இது தொடர்பாக சரணாலய இணை இயக்குனர் ஷில்பா குமார் தேக்கடியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலக பொறுப்பு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார். இது குறித்து தமிழக அதிகாரிகள் தெரிவிக்கையில், இந்நிகழ்ச்சிக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஹெலிகேம் நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. இருந்த போதும் இதனை பறக்க விட்டது யார்? என கேட்டு அதன் அறிக்கையை கேரள வனத்துறையினருக்கு அனுப்புவோம் என்றனர்.

Tags:    

Similar News