செய்திகள்
எல்லையில் உள்ள வீரர்கள்

எல்லை பதற்றம்... இந்தியா-சீனா கமாண்டர்கள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

Published On 2021-01-23 09:38 GMT   |   Update On 2021-01-23 09:38 GMT
எல்லை பதற்றங்களைத் தணிப்பது தொடர்பாக, இந்தியா, சீனா ராணுவ கமாண்டர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது.
புதுடெல்லி:

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில், லடாக் எல்லையில் பங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது. இதேபோன்ற சம்பவம் வடக்கு சிக்கிம் பகுதியிலும் நடந்தது.

லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து இருக்கிறது. எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் வழக்கமான ரோந்து பணியை மேற்கொள்வதற்கும் சீனா இடையூறு செய்கிறது. இதைத்தொடர்ந்து, சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவும் அங்கு படைகளை அனுப்பி உள்ளது.

இதனால் எல்லையில் பங்கோங் சோ ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் ஆகிய பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பதற்றத்தை தணிப்பதற்காக அந்த பகுதியில் உள்ள இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் ஏற்கனவே பல முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். மேலும் மேஜர் ஜெனரல்கள் மட்டத்திலும் 3 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு ஏற்படாமல் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

கிழக்கு லடாக்கில் எல்லை பதற்றங்களைத் தணிக்க இந்தியாவும் சீனாவும் ஒன்பதாவது சுற்று ராணுவ கமாண்டர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை நாளை நடத்தவுள்ளன. சுசுல் முகாம் அருகே மோல்டோவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும்.

மூத்த தளபதிகள் கடைசியாக நவம்பர் 6 ஆம் தேதி சந்தித்தனர். லடாக் பகுதியின்  நிலைமை பதற்றமாகவே உள்ளது, மேலும் தற்போது நடைபெற்று வரும் ராணுவ பேச்சுவார்த்தை எந்தவொரு முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கவில்லை.

படைகளை வாபஸ் பெறுவதற்கான  நிபந்தனைகளில் இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வேறுபாடுகள் இருப்பதால் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News