செய்திகள்

கன்னியாகுமரியில் ரெயில் டிக்கெட் கவுண்டருக்குள் பாம்பு புகுந்ததாக பரபரப்பு

Published On 2019-05-11 09:23 GMT   |   Update On 2019-05-11 09:23 GMT
கன்னியாகுமரியில் ரெயில் டிக்கெட் கவுண்டருக்குள் பாம்பு புகுந்ததாக ஊழியர் அலறியதையடுத்து டிக்கெட் எடுக்க காத்திருந்த பயணிகள் இடையேயும் பாம்பு பீதி ஏற்பட்டது.
கன்னியாகுமரி:

கோடை விடுமுறையையொட்டி கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் தற்போது அதிக அளவு வருகை தருகிறார்கள்.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலோர் ரெயில் மூலம் கன்னியாகுமரிக்கு வருவதால் ரெயில் நிலையத்தில் அதிக கூட்டம் காணப்படுகிறது. மேலும் டிக் கெட் எடுக்கவும் பயணிகள் டிக்கெட் கவுண்டர்களில் நீண்டநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

பயணிகள் வசதிக்காக கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் சிறப்பு டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டு உள்ளது. இன்று காலை வழக்கம்போல ஊழியர்கள் பணியில் இருந்தனர். டிக்கெட் எடுக்க பயணிகளும் வரிசையில் காத்திருந்தனர்.

அப்போது சிறப்பு டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கொடுத்துக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் தனது காலை ஏதோ கடித்ததை உணர்ந்தார். பாம்புதான் தன்னை கடித்துவிட்டது என்று பீதி அடைந்த அவர் பாம்பு.... பாம்பு.... என்று அலறியபடி கவுண்டரில் இருந்து வெளியே ஓட்டம்பிடித்தார். அவருடன் பணியில் இருந்த மற்ற ஊழியர்களும் பதட்டத்துடன் வெளியே ஓடினார்கள்.

இதைப் பார்த்ததும் டிக்கெட் எடுக்க காத்திருந்த பயணிகள் இடையேயும் பாம்பு பீதி ஏற்பட்டது. மேலும் இதுபற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் ரெயில் டிக்கெட் கவுண்டருக்குள் சென்று பாம்பை தேடினார்கள். நீண்ட நேரம் சோதனை நடத்திய பிறகும் பாம்பு எதுவும் சிக்கவில்லை. அப்போது அங்கிருந்த பொந்து ஒன்றில் இருந்து எலி வெளியே வந்து ஓடியது. இதனால் ரெயில்வே ஊழியரை அந்த எலிதான் கடித்திருக்க வேண்டும். அவர் பயத்தில் தன்னை பாம்பு கடித்துவிட்டதாக பீதி அடைந்து உள்ளார் என்பதை தீயணைப்பு வீரர்கள் உறுதி செய்தனர்.

பாம்பு பீதி காரணமாக கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.
Tags:    

Similar News