செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை காணலாம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.80 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Published On 2021-04-08 03:46 GMT   |   Update On 2021-04-08 03:46 GMT
விமானத்தில் உள்நாட்டு பயணியாக திருவனந்தபுரத்தில் இருந்து பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த முகமது அனஸ் என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
சென்னை:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன்சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக திருவனந்தபுரத்தில் இருந்து பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த முகமது அனஸ் (வயது 28) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அவர் ஒருவித பதற்றத்துடனும், பரபரப்பாகவும் காணப்பட்டார். எனவே அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர் அணிந்து இருந்த பேண்ட்டில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் சார்ஜாவில் இருந்து அந்த தங்கத்தை கடத்தி வந்தவர், விமான இருக்கையின் அடியில் அதை மறைத்து வைத்துவிட்டு திருவனந்தபுரத்தில் இறங்கி விட்டதாகவும், பின்னர் உள்நாட்டு பயணியாக திருவனந்தபுரத்தில் ஏறிய தான் இருக்கையின் அடியில் இருந்த தங்கத்தை எடுத்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

அவரிடம் இருந்து ரூ.59 லட்சத்து 18 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 280 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

அதேபோல் துபாயில் இருந்து லக்னோ வழியாக சென்னை வந்த விமானத்தில் உள்நாட்டு பயணியாக வந்த சென்னையை சேர்ந்த ராவுத்தர் நைனா முகமது (30) என்பவர் வந்தார். இவரும் அதேபோல் விமான இருக்கையின் அடியில் மறைத்து வைத்து இருந்த தங்கத்தை தனது கால் உறைக்குள்(சாக்ஸ்) மறைத்து எடுத்து வந்தார். அவரிடம் இருந்து ரூ.20 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 450 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.79 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 730 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News