செய்திகள்
கோப்புபடம்

கன்னியாகுமரி போலீஸ் நிலைய வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Published On 2021-06-19 15:26 GMT   |   Update On 2021-06-19 15:43 GMT
கன்னியாகுமரி போலீஸ் நிலைய வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 3 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் ஊரடங்கை மீறி சுற்றி திரிந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வகையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கன்னியாகுமரி போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது நாளொன்றுக்கு 10 வாகனங்கள் வரை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை திடீரென்று தீப்பிடித்து எரிந்தன.

அப்போது பணியில் இருந்த போலீசார் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தண்ணீரை ஊற்றி வாகனத்தில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 2 ஆட்டோக்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என 3 வாகனங்கள் எரிந்து நாசமானது.

கன்னியாகுமரி பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் சுற்றி வருகிறார்கள். அவர்கள் சில நேரங்களில் போலீஸ் நிலைய வளாகத்துக்கு வந்து படுத்து தூங்குவது வழக்கம் என்றும், அப்போது குப்பைகளை தீ வைத்து எரிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

அவ்வாறு குப்பைக்கு வைத்த தீயால் இந்த சம்பவம் நடந்ததா? அல்லது சமூக விரோத கும்பலின் நாசவேலையா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News