செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

குட்டையில் மண் எடுக்க எதிர்ப்பு - பல்லடத்தில் பொதுமக்கள் போராட்டம்

Published On 2021-11-29 07:08 GMT   |   Update On 2021-11-29 07:08 GMT
தாசில்தார் பாலம் கட்டுமான பணிக்கு மண் எடுக்கிறார்கள், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று உள்ளார்கள் என பொதுமக்களிடம் விளக்கி உள்ளார் .
பல்லடம்:

பல்லடம் - பொள்ளாச்சி ரோடு விரிவாக்க பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்றது. இதற்காக வெங்கிட்டாபுரம் மற்றும் சின்னூர் பிரிவு ஆகிய 2 இடங்களில் பாலம் அமைக்கும் பணி நடைப்பெற்றது.

ரோட்டின் ஓரங்களில் மண் போடுவதற்காக அந்தப்பகுதியில் உள்ள செங்குட்டை என்ற குட்டை பகுதியில் மண் எடுக்கப்பட்டு ரோடுகளின் ஓரம் கொட்டப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று குட்டையில் மண் எடுக்க லாரி மற்றும் பொக்லைன் எந்திரங்கள் சென்றன.

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குட்டையில் மண் எடுக்கக்கூடாது எனக்கூறி வாகனங்களை சிறைபிடித்தனர். இதுகுறித்து பல்லடம் தாசில்தார் தேவராஜ்க்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பேசினார். 

பொள்ளாச்சி ரோடு அருகே நடக்கும் பாலம் கட்டுமான பணிக்கு மண் எடுப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தாசில்தார் பாலம் கட்டுமான பணிக்கு மண் எடுக்கிறார்கள், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று உள்ளார்கள் என பொதுமக்களிடம் விளக்கி உள்ளார் .

அதற்கு பொது மக்கள் இந்தப் பகுதியில் நடைபெறும் ரோடு வேலைக்கு மண் எடுத்தார்கள், விட்டு விட்டோம். வேறு இடத்தில் நடைபெறும் வேலைக்கு அங்கு மண் எடுத்து கொள்ளட்டும். இந்தக் குட்டையில் எடுக்கக்கூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மண் எடுக்காமல் லாரிகள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று குட்டை பகுதியில் உள்ள முட்புதர்களை அகற்றி தர தனியார் நிறுவனம் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News