செய்திகள்
கனிமொழி

வருமானவரி சோதனையை கண்டு திமுக அஞ்சாது- கனிமொழி எம்.பி. ஆவேசம்

Published On 2021-04-02 09:55 GMT   |   Update On 2021-04-02 11:35 GMT
திமுக ஆட்சிக்கு வந்தால் புதிய தொழிற்சாலை உருவாக்கப்பட்டு அதில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
சங்கரன்கோவில்:

தி.மு.க. மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து அவர் பேசியதாவது:-

இந்த தொகுதியில் கடந்த சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற்று அமைச்சர் ஆனார். ஆனால் அவர் இந்த தொகுதியில் எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. எனவே அடிப்படை வசதிகள், நலத்திட்டங்கள் கிடைத்திட தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்.

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சங்கரன்கோவில் பகுதியில் தொழிற்சாலை அமைக்கப்படும். அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளும் செயல்படுத்தப்படும்.

இன்றைய அ.தி.மு.க. ஆட்சி அ.தி.மு.க.வை டெல்லியில் அடகு வைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டின் உரிமையை, மருத்துவ மாணவர்களின் உரிமையை, இளைஞர்களின் உரிமையை அடகு வைத்து விட்டார்கள்.



தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். தற்போது அரசு துறையில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். புதிய தொழிற்சாலை உருவாக்கப்பட்டு அதில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

ஆட்டோ வாங்குவதற்கு மானியமாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். மகளிர் சுய உதவி குழு, கல்விக்கடன்கள் ரத்து செய்யப்படும். கலைஞர் கொண்டுவந்த திட்டமான விவசாய கடன் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும்.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

இதனைத்தொடர்ந்து கனிமொழி எம்.பி. ஆலங்குளம் பிரசாரத்தில் பேசியதாவது:-

மு.க.ஸ்டாலின் மகள், மருமகன் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்று உள்ளது. இதனை கண்டு தி.மு.க. அஞ்சாது. மத்திய அரசு துணையோடு நடைபெற்ற இந்த சோதனையை கண்டு நாங்கள் அஞ்சமாட்டோம். இதற்கு மேல் எங்களது தொண்டர்கள் 10 மடங்கு அதிகமாக உழைப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News