ஆன்மிகம்
வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவில் தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவில் தேர் திருவிழா

Published On 2021-02-23 02:54 GMT   |   Update On 2021-02-23 02:54 GMT
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை சுப்பிரமணியசாமி கோவிலில், தேர்த்திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் பிரம்மோற்சவ தேர்த்திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக 15-ந்் தேதி விநாயகர் உற்சவம் நடந்தது. கொடியேற்றத்தை தொடர்ந்து பல்வேறு வாகன உற்சவங்கள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. 20-ந் தேதி தேரின் மீது கலசம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முதல் நாள் தேர்நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமி, தேரின் மீது ஏற்றுதல் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது சாமி அமர்ந்து, மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு தேரில் ஏற்றப்பட்ட வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. மாவட்ட வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் குப்பத்தா மோட்டூர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள் சோமநாதபுரம் சின்னதுரை, ஸ்ரீசைலம், வள்ளிமலை கோவில் செயல் அலுவலர் சிவா, ஆய்வாளர் செண்பகம், மேலாளர் நித்தியானந்தம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர், அறங்காவலர்கள், தேர் உற்சவதாரர்கள், உபயதாரர்கள், நாட்டாண்மை தாரர்கள், கூட்டுறவு சங்கத் தலைவர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அப்போது கூடியிருந்த பக்தர்கள் வள்ளிமலை முருகனுக்கு அரோகரா, வள்ளி மணாளனுக்கு அரோகரா, வள்ளி தெய்வானைக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பினர்.

தேரோட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் கீழே விழுந்தனர்.

முதல் நாளான நேற்று இரவு, மலை சுற்றுப்பாதையில் உள்ள துண்டு கரையருகே தேர் நிறுத்தப்பட்டது. அங்கு சாமிக்கு பூஜைகள் நடைபெற்றது. இரண்டாவது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை மீண்டும் தேரோட்டம் நடக்கிறது.

Tags:    

Similar News