செய்திகள்

பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கு திரும்பி வர முடியவில்லை - மெகுல் சோக்ஷி

Published On 2018-03-08 11:18 GMT   |   Update On 2018-03-08 11:18 GMT
ரூ.12,700 கோடி மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மெகுல் சோக்ஷி, பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் தன்னால் இந்தியாவுக்கு திரும்ப முடியவில்லை என கூறியுள்ளார். #PNBScam #Niravmodi #MehulChoksi

புதுடெல்லி:

நாட்டின் 2-வது மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் பிரபல வைர வியாபாரி நிரவ்மோடி ரூ.12,700 கோடி மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். வெளிநாட்டுக்கு தப்பி சென்ற நிரவ்மோடி, அவரது மனைவி அமி, உறவினர் மெகுல் சோக்ஷி ஆகியோரை இந்தியா கொண்டு வர சர்வதேச போலீஸ் உதவியை நாடியுள்ளனர்.

கடன் உத்தரவாத பத்திரங்களை பெற்று செய்த இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நே‌ஷனல் வங்கி அதிகாரிகள் மற்றும் நிரவ் மோடி நிறுவனத்தின் அதிகாரிகள் என 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் பலர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் உயர் பதவியில் இருப்பவர்கள்.



இந்த மோசடி தொடர்பாக நிரவ் மோடி, மெகுல் சோக்ஷின் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளி நாட்டு சொத்துக்களையும் பறிமுதல் செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு இருந்தது. அவர்களின் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டுள்ளது.

நிரவ்மோடி மற்றும் அவரது பங்குதாரர்களும், உறவினருமான மெகுல் சோக்சியின் நிறுவனங்களுக்கு கடன் அளித்தது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நிரவ்மோடி, மெகுல் சோக்ஷி ஆகியோர் வெளிநாடுகளில் இருப்பதால் அவர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து அவர்கள் இருவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மெகுல் சோக்ஷி தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதால் தன்னால் இந்தியாவுக்கு திரும்ப முடியவில்லை என சி.பி.ஐ.க்கு பதிலளித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சி.பி.ஐ.க்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. எனவே என்னால் இந்தியாவுக்கு திரும்பி வர இயலாது. எனது பாஸ்போர்ட் ஏதற்காக முடக்கப்பட்டுள்ளது என்பதையும், நான் எந்த வகையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறேன் என்பது பற்றியும் மும்பை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் இதுவரை எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்’, என கூறியுள்ளார்.

மேலும் இந்த மோசடி தொடர்பாக தன் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படும் முன்னரே தொழில்முறை பயணமாக வெளிநாட்டுக்கு சென்று விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். #PNBScam #Niravmodi #MehulChoksi #tamilnews
Tags:    

Similar News