செய்திகள்
பாம்பு தோல்

ஏழு தலை நாகம் உண்மையா?- பெங்களூரு அருகே பரபரப்பை ஏற்படுத்திய பாம்பு தோல்

Published On 2019-10-10 07:04 GMT   |   Update On 2019-10-10 09:27 GMT
கர்நாடக மாநிலத்தில் ஏழு தலை பாம்பின் தோல் என்று நம்பி, அதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வழிபட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கனகாபுராவில் மரிகவுடனா டோடி என்ற கிராமம் உள்ளது. இங்கு உள்ள கோவிலுக்கு அருகே பாம்பின் தோல் ஒன்று கிடந்து உள்ளது. காலையில் கோவில் வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த  கோயில் ஊழியர் இந்த தோலைக் கண்டு உள்ளார். கோயில் வளாகத்திலிருந்து 10 அடி தூரத்தில் இது கிடந்து உள்ளது.

இங்குள்ள கிராமவாசிகள் அந்த தோலை ஏழு தலை பாம்பின் தோல் என்று நம்புகிறார்கள். அங்கு எழு தலை பாம்பு  இருப்பதாகவும் நம்புகிறார்கள். புராண காலத்து கதைகளில் கேள்விப்பட்டிருக்கும், ஏழு தலை உடைய பாம்பு உண்மையில் இருக்கக்கூடும் என்று நம்புகிறார்கள். இந்த தகவல் பரவியதையடுத்து, நேற்றில் இருந்து அங்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து செல்கின்றனர். சிலர் ஆர்வமிகுதியால் குங்குமம் தூவி வழிபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இது குறித்து கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் கூறுகையில், “இதே போன்ற தோல் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது.  இந்த இடத்திற்கு சிறப்பு சக்தி இருப்பதாக கிராம மக்கள் நினைத்து இங்கு ஒரு கோயில் கட்டினர். இப்போது, கோவிலுக்கு அருகே பாம்பின் தோல் கிடந்து உள்ளது. காலையில் வளாகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த ஒரு கோயில் ஊழியர், பாலப்பா என்ற கிராமவாசியின் வயலில் தோலைக் கண்டார். கோயில் வளாகத்திலிருந்து 10 அடி தூரத்தில் கிடந்து உள்ளது”என்றார்.

ஆனால் அப்படி ஒரு வகை பாம்பு கிடையாது என பாம்பு வல்லுநர்கள் கூறுகின்றனர். இது குறித்து பாம்பு வல்லுநர் ஒருவர் கூறும்போது, “உலகில் எங்கும் ஏழு தலை பாம்பு குறித்த பதிவு எதுவும் இல்லை. இரண்டு தலை பாம்புகள் உள்ளன, ஆனால் அவையும் மிகவும் அரிதானவை. மனிதர்களிடையே இணைந்த இரட்டையர்களைப் போலவே, சில பாம்புகளுக்கும் இரண்டு தலைகள் இருக்கும்,” என்று அவர் கூறினார்

ஊர்வனவற்றில் தோல் உதிரும் செயல்முறை எக்டிசிஸ் என்று அழைக்கப்படுகிறது. பழைய தோலில் வளர்ந்திருக்கும் ஒட்டுண்ணிகளை அகற்ற பாம்புகள் தோலை உரிக்கின்றன. இந்த செயல்முறை அவற்றின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. பொதுவாக, மூன்று வாரங்கள் முதல் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பாம்புகள் தோலை உரிக்கும்.
Tags:    

Similar News