செய்திகள்
மத்திய அரசு

கொரோனா விதிகளை மீறினால், அதிகாரிகள் மீது நடவடிக்கை- மத்திய அரசு உத்தரவு

Published On 2021-07-15 01:58 GMT   |   Update On 2021-07-15 01:58 GMT
மலைப்பிரதேசங்களிலும், சந்தைகளிலும் மக்கள் முககவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் கொரோனா விதிகளை அப்பட்டமாக மீறினால், அதிகாரிகளை பொறுப்பேற்க வைத்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா காலத்தில் முககவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், கூட்டம் கூடக்கூடாது, கைச்சுத்தம் பராமரிக்க வேண்டும் என்பதெல்லாம் அத்தியாவசியமாக அனைவரும் பின்பற்றியே ஆக வேண்டிய கட்டுப்பாட்டு விதிகள் ஆகும்.

ஆனால் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓய்ந்து வருவதால், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட தளர்வுகளை தவறாக பயன்படுத்தி, கொரோனா கால விதிமுறைகளை மக்கள் காற்றில் பறக்க விடுகின்றனர். குறிப்பாக மலை வாழிடங்கள், சந்தைகள், திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் இன்ன பிற நிகழ்வுகளில் இதைப்பார்க்க முடிகிறது.

இதையொட்டி மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசின் உள்துறைச்செயலாளர் அஜய் பல்லா ஒரு அவசர கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் எழுதி இருப்பதாவது:-

மலை வாழிடங்கள் உள்பட நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா கால விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன.

பொது போக்குவரத்து சாதனங்களில் கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. சந்தைகளில் தனிமனித இடைவெளியை காற்றிலே பறக்க விட்டு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தடுப்பூசி போடுவது கணிசமாக அதிகரித்து வருகிறது. இருந்தபோதும், இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதில் நிறைவு அடைவதற்கு வழியே இல்லை. ஒவ்வொருவரும் கொரோனா கால நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதால், பொருளாதார நடவடிக்கைகளை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் படிப்படியாக திறந்து விடுகின்றன. ஆனால் தளர்வுகளை நடைமுறைப்படுத்தும் செயல்முறைகளை கவனமாக முடிவு செய்ய வேண்டும்.

பாதிப்பு விகிதம் குறைந்து வருகிற நிலையில், எதிர்காலத்தில் தொற்று எழுச்சி பெறாமல் தடுக்க வேண்டும்.

சில மாநிலங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. தற்போது பாதிக்கப்பட்ட ஒரு நபர், இன்னும் ஒரு நபருக்கு குறைவானவருக்கு மட்டுமே தொற்றினை பரப்புகிறார். இது அதிகரித்து விடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எனவே கடைகள், வணிக வளாகங்கள், சந்தைகள், வாரச்சந்தைகள், உணவுவிடுதிகள், மதுக்கூடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில்வே நடைமேடைகள், பூங்காக்கள், பயிற்சிக்கூடங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றிலும், ஏற்கனவே தீவிரமான பரவல் என அறிவித்து தடை செய்யப்பட்ட பகுதிகளிலும், மக்கள் கூட்டம் கூடுகிற இன்னபிற பகுதிகளிலும் கொரோனா நடத்தை விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப்பாக்கி நடவடிக்கை எடுப்பது முக்கியம் ஆகும்.

கொரோனா கால விதிமுறைகள் பின்பற்றப்படாத எந்தவொரு நிறுவனமும், வளாகங்களும், சந்தைகளும், பிற இடங்களும் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்க ஏற்றவை ஆகும். தொடர்புடைய சட்டங்களின் கீழ் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரிசோதனை, தடம் அறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், கொரோனா கால விதிமுறைகளை பின்பற்றுதல் என 5 அம்சங்களும் திறம்பட நிர்வகிக்கப்படவேண்டும்.

எனவே கூட்ட நெரிசலாக உள்ள இடங்களை ஒழுங்குபடுத்தவும், கொரோனா தொற்றை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும், மாவட்டங்களுக்கும், உள்ளூர் அதிகாரிகளுக்கும் கடுமையான வழிமுறைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கொரோனா கால விதிமுறைகளை அமல்படுத்துவதில் ஏற்படுகிற எந்தவொரு குறைபாட்டுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க செய்ய வேண்டும்.

இது தொடர்பாக மாநிலங்களும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும், மாவட்ட அதிகாரிகளும் பிறப்பிக்கிற உத்தரவுகள், முறையாக செயல்படுத்தப்படுவதற்காக பொது மக்களிடையேயும், களப்பணியாளர்களிடமும் பரப்பப்பட வேண்டும்.
Tags:    

Similar News