செய்திகள்
கோப்புப்படம்

பிப்ரவரி 18-ந் தேதி வரை டெல்லி போராட்டக்களங்களில் 68 விவசாயிகள் உயிரிழப்பு

Published On 2021-03-08 19:19 GMT   |   Update On 2021-03-08 19:19 GMT
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த நவம்பர் மாத இறுதியில் இருந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.
சண்டிகர்:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த நவம்பர் மாத இறுதியில் இருந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். இதில் அவ்வப்போது பல்வேறு காரணங்களால் உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில் அரியானா-டெல்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டக்களங்களில் இதுவரை ஏற்பட்டுள்ள மரணங்கள் எத்தனை? அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு உதவி அளித்திருக்கிறதா? என அரியானா சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மாநில உள்துறை மந்திரி அனில் விஜ் நேற்று எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில், டெல்லியுடனான அரியானா எல்லையில் கடந்த 18-ந் தேதி வரை 68 விவசாயிகள் இறந்திருப்பதாகவும், இதில் 47 பேர் பஞ்சாப்பையும், 21 பேர் அரியானாவையும் சேர்ந்தவர்கள் எனவும் கூறினார்.

உயிரிழந்தவர்களில் 51 பேர் உடல் நலக்கோளாறு காரணமாகவும், 15 பேர் சாலை விபத்துகளிலும், 2 பேர் தற்கொலை செய்து கொண்டும் இறந்ததாக தெரிவித்த விஜ், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என எந்தவித பரிந்துரையும் அரசிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.
Tags:    

Similar News