செய்திகள்
கரூர் இரட்டை வாய்க்காலில் குப்பை கூளங்களும், செடி, கொடிகளும் மண்டிக்கிடக்கும் காட்சி.

கரூர் இரட்டை வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்படும் அவலம்- சமூக ஆர்வலர்கள் வேதனை

Published On 2021-05-12 11:17 GMT   |   Update On 2021-05-12 11:17 GMT
நீர் ஆதாரமாக விளங்கி வந்த கரூர் இரட்டை வாய்க்காலில் தற்போது குப்பைகள் கொட்டப்படும் அவலநிலை நீடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறினர்.
கரூர்:

கரூர் நகரில் இரட்டை வாய்க்கால் உள்ளது. ஒரு காலத்தில் இந்த வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த தண்ணீர் பொதுமக்களுக்கு மட்டுமின்றி விவசாய பணிகளுக்கும் நீர் ஆதாரமாக விளங்கி வந்தது.

அதன்பிறகு விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு குடியிருப்புகள் உருவாகின. நாளடைவில் இந்த இரட்டை வாய்க்காலும் கவனிப்பாரின்றி போனதால் தண்ணீரின்றி வறண்டது. தற்போது இந்த வாய்க்காலில், இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மேலும், அந்த வாய்க்காலில் குப்பை, கூளங்களும் அதிகளவு கொட்டப்படுகின்றன. செடி, கொடிகளும் வளர்ந்துள்ளன. விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது.

தற்போது அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. ஆகவே, இந்த இரட்டை வாய்க்காலை தூர்வாரி சுத்தப்படுத்தினால் பழைய நிலையை அடையலாம். பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் நீர் ஆதாரமாக அமையும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News