செய்திகள்
பினராயி விஜயன்

சபரிமலை அய்யப்பன் கோவில் பிரச்சினையில் கேரள அரசு நிலையில் மாற்றம்

Published On 2021-03-19 22:27 GMT   |   Update On 2021-03-19 22:27 GMT
சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இறுதி தீர்ப்பு வந்த பிறகு எல்லோருடனும் பேசி முடிவு செய்யப்படும் என்று பினராயி விஜயன் கூறினார்.
பாலக்காடு:

சபரிமலை அய்யப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயதுவரை உடைய பெண்களை அனுமதிப்பது இல்லை. அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு முடிவு செய்தது. அதை எதிர்த்து பா.ஜனதா உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. கோவிலுக்கு வந்த பெண்களை தாக்க முயற்சி நடந்தது. இதற்கிடையே, கேரள சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் 6-ந் தேதி நடக்கிறது. அதையொட்டி, தீவிர பிரசாரம் நடந்து வருகிறது.

கடந்த வாரம் பேட்டி அளித்த கேரள தேவசம் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், 2018-ம் ஆண்டில் சபரிமலை கோவிலில் நடந்த சம்பவங்கள் எல்லோருக்கும் வேதனையை ஏற்படுத்தி இருப்பதாக வருத்தம் தெரிவித்தார். இதை பயன்படுத்தி, பா.ஜனதாவும், காங்கிரசும் சபரிமலை பிரச்சினையை மீண்டும் எழுப்பி இடதுசாரி கூட்டணியை தாக்கி வருகின்றன.

இதுகுறித்து மவுனம் சாதித்து வந்த முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று மவுனத்தை கலைத்தார். ஆனால், சுப்ரீம் கோா்ட்டு தீர்ப்பை அப்படியே அமல்படுத்தாமல், எல்லோருடனும் ஆலோசனை நடத்துவோம் என்று கூறும் அளவுக்கு அவரது நிலைப்பாட்டில் மாற்றம் காணப்பட்டது.

பாலக்காடு மாவட்டம் பட்டாம்பியில் பினராயி விஜயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலில் எல்லாம் சுமுகமாகவே சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரம், சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வில் நிலுவையில் உள்ளது. அங்கு இறுதி தீர்ப்பு அளிக்கும்போதுதான், விவகாரம் பேசுபொருளாகும். அப்போது, இறுதி தீர்ப்பு தொடர்பாக ஏதேனும் பிரச்சினை எழுந்தால், சமூகத்தின் ஒவ்வொரு தரப்புடனும் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம். அதற்குள் ஏன் இப்போதே கவலைப்பட வேண்டும்?

கேரள சட்டசபை தேர்தலில் கடந்த தடவையை விட அதிக இடங்களில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெறும். காங்கிரஸ்-பா.ஜனதா இடையே கடந்த தடவை ரகசிய கூட்டணி இருந்தது. இப்போது, வெளிப்படையான கூட்டணியே இருக்கிறது. இந்த கட்சிகளிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

உலகமயமாக்கல் கொள்கையையும், தனியார் மயமாக்கல் கொள்கையையும் காங்கிரஸ்தான் தொடங்கி வைத்தது. அதையே இப்போது பா.ஜனதா தொடர்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News