வழிபாடு
கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவில்

கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் நாகநாதசாமி கோவிலில் 21-ந்தேதி கேது பெயர்ச்சி விழா

Published On 2022-03-20 01:30 GMT   |   Update On 2022-03-19 05:15 GMT
பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் வருகிற 21-ந் தேதி (திங்கட்கிழமை) நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தரநாயகி சமேத நாகநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

சாயாகிரகம் என்று அழைக்கப்படும் இவர், 1½ ஆண்டுக்கு ஒருமுறை பின்னோக்கி பெயர்ச்சியாகிறார். இவரை வணங்கினால் நீதிமன்ற வழக்குகளில் தீர்வு, திருமண தடை, செல்வ செழிப்பு, ஆன்மீக பயணங்கள், குடும்ப ஒற்றுமை உள்ளிட்டவைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பல்வேறு சிறப்புகளை கொண்ட கேது பகவான் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) பிற்பகல் 3.14 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனை முன்னிட்டு இரண்டு கால யாக பூஜைகள் நடக்கின்றன.

இதனைத்தொடர்ந்து மகா பூர்ணாகுதி, பல்வேறு நறுமண பொருட்களால் அபிஷேகம் நடக்கிறது. பின்னர் 3.14 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. இந்த பெயர்ச்சி விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், தக்கார் நித்யா மற்றும் தலைமை அர்ச்சகர் பட்டு சிவாச்சாரியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News