செய்திகள்
மாதிரிப் படம்

இந்தியா மீது தாக்குதல் நடத்த எல்லைப்பகுதியில் 2 ஆயிரம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காத்திருப்பு

Published On 2019-10-08 10:35 GMT   |   Update On 2019-10-08 12:11 GMT
மழை மற்றும் பனிக்காலத்தை சாதகமாக்கி இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்காக சுமார் 2 ஆயிரம் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் முகாம்கள் அமைத்து பயிற்சி பெற்று வருவதாக உளவுத்துறை தகவல் குறிப்பிடுகின்றது.
புதுடெல்லி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந்தேதி பாதுகாப்புபடை வீரர்கள் வாகனங்களில் சென்றபோது பயங்கரவாதி ஒருவன் தற்கொலை படை தாக்குதல் நடத்தினான்.

இதில் 40 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவ விமானங்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்கி அழித்தன. கடந்த ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், மழை மற்றும் பனிக்காலத்தை சாதகமாக்கி இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவதற்காக சுமார் 2 ஆயிரம் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் முகாம்கள் அமைத்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

ஒரு முகாமிற்கு சுமார் 50 பேர் வீதம் 20 முகாம்களில் சுமார் ஆயிரம் பேர் பயிற்சி பெற்று இந்தியாவிற்குள் ஊடுருவ தகுந்த நேரம் பார்த்து காத்திருப்பதாகவும், மேலும் இதேபோல் சுமார் ஆயிரம் பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் உளவுத்துறை தகவல் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் ,ஜம்மு காஷ்மீரில் 200 முதல் 300 பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல்துறை இயக்குநர் ஜெனரல் தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News