ஆன்மிகம்
பழனி முருகன் கோவிலில் தரிசனத்துக்கு 3 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் தரிசனத்துக்கு 3 மணிநேரம் காத்திருந்த பக்தர்கள்

Published On 2021-01-18 05:47 GMT   |   Update On 2021-01-18 05:47 GMT
அலைமோதிய கூட்டத்தினால், பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்தனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் வருகிற 22-ந்தேதி தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி நேற்று ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, தீர்த்தக்காவடி, இளநீர் காவடி உள்ளிட்ட காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். சில பக்தர்கள் அலகு குத்தி வந்தனர். மதுரையை சேர்ந்த பக்தர் ஒருவர் 22 அடி நீள அலகு குத்தி வந்தது பரவசத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தொடர் விடுமுறை காரணமாக நேற்று காலை முதலே தரிசனத்துக்காக பழனியில் பக்தர்கள் குவிந்தனர். மேலும் அடிவார பகுதி முழுவதும் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

இதேபோல் பாத விநாயகர் கோவில் அருகிலும் நேற்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட இருமடங்கு அதிகமாக இருந்தது. மேலும் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்திலும் கூட்டம் அலைமோதியது.

பக்தர்கள் வருகை வழக்கத்தைவிட இருமடங்கு இருந்ததால் மின் இழுவை ெரயில் நிலையம், ரோப்கார் நிலையம் மற்றும் தரிசன வழிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது.

இதனால் சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பின்னரே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் இடும்பன் மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதில் ஒரு சில பக்தர்கள் ஆபத்தான முறையில் பாறையில் அமர்ந்து செல்பி எடுத்து வருகின்றனர். இதனால் இடும்பன் மலை கோவிலில் கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
Tags:    

Similar News