செய்திகள்
மணிவண்ணன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவருக்கு ஜாமீன் மறுப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2019-09-03 03:03 GMT   |   Update On 2019-09-03 03:03 GMT
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மணிவண்ணணின் ஜாமீன் மனுவை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சென்னை:

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள், பெண் டாக்டர்கள் என்று ஏராளமானோரை ஒரு கும்பல் பாலியல் கொடுமை செய்து, அதை வீடியோ படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்து வந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்பட 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரிகள், இந்த வழக்கில் மணி என்ற மணிவண்ணன் என்பவரை கைது செய்தனர். இவர், தனக்கு ஜாமீன் வழங்கவேண்டும் என்று மாவட்ட செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வக்கீல் கே.சீனிவாசன், மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மணிக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Tags:    

Similar News