ஆன்மிகம்
போலீசாரும், நகராட்சி பணியாளர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காட்சி.

அக்னி தீர்த்த கடலில் தடையை மீறி புனித நீராடிய பக்தர்கள்

Published On 2021-06-11 06:42 GMT   |   Update On 2021-06-11 06:42 GMT
ராமேசுவரம் கோவில் ரத வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு தடையை மீறி பூஜை செய்ததாக புரோகிதர் ஒருவருக்கு வருவாய்த்துறையினர் ரூ.5,000 அபராதமும் விதித்தனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாததுடன் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வைகாசி மாதத்தின் சர்வ அமாவாசையான நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடல் மற்றும் கடற்கரை பகுதி பக்தர்கள் நீராட வராமல் முழுமையாக வெறிச்சோடி காணப்பட்டது. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் இருந்து ஒரு வேனில் 15-க்கும் மேற்பட்டோர் ராமேசுவரம் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த கோவில் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வருவாய்ஆய்வாளர் பாலா, சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் நகராட்சி அதிகாரிகள்
அக்னி தீர்த்த
கடலில் நீராடிக்கொண்டிருந்த பக்தர்களை தடை விதிக்கப்பட்டுள்ளதால் யாரும் நீராடக் கூடாது. வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து அவர்கள் கடலில் இருந்து வெளியேறி வந்த வாகனத்திலேயே வேகமாக சொந்த ஊர் சென்றனர். தொடர்ந்து போலீசாரும், நகராட்சி பணியாளர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அரசின் உத்தரவை மீறி ராமேசுவரம் கோவில் ரத வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு தடையை மீறி பூஜை செய்ததாக புரோகிதர் ஒருவருக்கு வருவாய்த்துறையினர் ரூ.5,000 அபராதமும் விதித்தனர்.
Tags:    

Similar News