விளையாட்டு
ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மா ஆடுகிறார்: ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு

Published On 2022-01-26 06:36 GMT   |   Update On 2022-01-26 06:36 GMT
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒயிட்பால் கிரிக்கெட் தொடரில் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் ஒயிட்பால் போட்டிகளுக்கு (ஒருநாள் ஆட்டம், 20 ஓவர்) ரோகித் சர்மா சமீபத்தில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். காயம் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் ஆடவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்க தொடரில் லோகேஷ் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்றார். அவரது தலைமையிலான அணி 3 ஒருநாள் போட்டிகளிலும் தோற்று ஒயிட் வாஷ் ஆனது.

இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகள் பிப்ரவரி 6, 9, 11 ஆகிய தேதிகளில் அகமதாபாத்திலும், 20 ஓவர் ஆட்டங்கள் பிப்ரவரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் கேப்டன் ரோகித் சர்மா விளையாடுகிறார். காயத்தில் இருந்த அவர் உடல் தகுதி பெற்றுவிட்டதாக கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ரோகித் சர்மா உண்மையில் ஏற்கனவே பயிற்சியை தொடங்கி விட்டார் என்றும் விரைவில் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று தனது உடல் தகுதியை நிரூபிப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.


முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவரான பும்ராவுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆல்- ரவுண்டர்களான ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் இல்லாதது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.



இருவரும் உடல் தகுதியுடன் இருந்தால் அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. மோசமான பந்துவீச்சு காரணமாக புவனேஸ்வர் குமார் நீக்கப்படலாம். இதேபோல காயம் அடைந்ததால் அஸ்வின் இடம்பெற மாட்டார்.

தமிழக வீரரான ஷாருக்கான், அவேஸ்கான், ஹர்‌ஷல் படேல் ஆகியோர் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்படுகிறது. 

Tags:    

Similar News