செய்திகள்
மனைவி, குழந்தைகளுடன் மெக்கானிக் செல்வகுமார்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க மண்எண்ணை பாட்டிலுடன் வந்த மெக்கானிக் தம்பதி

Published On 2021-11-22 08:20 GMT   |   Update On 2021-11-22 08:20 GMT
20 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால் மண்எண்ணை பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததாக மெக்கானிக் தம்பதி தெரிவித்தனர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழுவூர் கண்ணங்குளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 42), மெக்கானிக்.

இவர் இன்று தனது மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிப்பதற்காக வந்தார். மனு நீதி நாள் முகாமையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கலெக்டர் அலுவலக வாசல் வழியாக மனு கொடுக்க வந்தவர்களின் உடமைகளை போலீசார் பரிசோதனை செய்து அனுப்பினர். அப்போது செல்வகுமாரின் பையில் மண்எண்ணை பாட்டில் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது செல்வகுமார் கூறியதாவது:-

எனது வீட்டில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகள் கடந்த 23.1.2020 அன்று திருட்டு போனது. இதுதொடர்பாக எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண் மீது சந்தேகம் தெரிவித்து நாங்கள் போலீசில் புகார் செய்தோம்.

ஆனால் அந்த பெண்ணிடம் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணை பாட்டிலுடன் வந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரை போலீசார் எச்சரிக்கை செய்தனர். பின்னர் உங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளியுங்கள். உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என அறிவுரை கூறி அனுப்பினர்.

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையகருங்குளம் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் முருகன். இவரது மனைவி ராணி (50). இவர்கள் இருவரும் இன்று கலெக்டர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர்.

வாசலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடமைகளை பரிசோதனை செய்த போது, ராணியின் பையில் மண்எண்ணை கேன் இருந்தது.

அதனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராணி கூறியதாவது:-

எனக்கு சொந்தமாக 3 சென்ட் இடம் உள்ளது. இந்த இடம் தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் பிரச்சினை செய்கிறார். இதுகுறித்து போலீசில் புகார் செய்தால், உரிய முறையில் அளந்து பிரச்சினையை தீர்க்குமாறு கூறுகின்றனர்.

எனவே அந்த இடத்தை அளந்து தரக்கோரி தாசில்தார் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துவிட்டோம். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் அவர்கள் அளந்து தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மண்எண்ணை கேனுடன் வந்ததாக கூறினார்.

அவரை போலீசார் எச்சரிக்கை செய்து உரிய அறிவுரை வழங்கினர். பின்னர் ராணி கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் அளித்துவிட்டு சென்றார். 


Tags:    

Similar News