வழிபாடு
சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில்

சீனிவாசமங்காபுரம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசன ஏற்பாடு குறித்து ஆலோசனை

Published On 2022-01-04 07:54 GMT   |   Update On 2022-01-04 07:54 GMT
பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும். பக்தர்களின் வசதிக்காக திருப்பதி, சந்திரகிரி பகுதிகளில் இருந்து சீனிவாசமங்காபுரத்துக்கு பஸ்கள் இயக்கப்படும்.
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருகிற 13-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. அதையொட்டி பக்தர்களுக்கு விரிவான தரிசன ஏற்பாடுகள் செய்வது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் திருப்பதியில் தேவஸ்தான அலுவலக பவனில் தேவஸ்தான அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வைகுண்ட ஏகாதசி அன்று சீனிவாசமங்காபுரம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு வசதியாக, தரிசன வரிசைகள், செல்போன்கள் மற்றும் பொருட்கள் பாதுகாப்பறை ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏழுமலையான் கோவில் லட்டுகள், காலண்டர்கள், டைரிகள் ஆகியவற்றை பக்தர்களுக்கு விற்பனை செய்ய ஸ்டால்கள் வைக்கப்படும். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த அனைத்து வசதிகளுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்படும். பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படும்.

ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு சேவை செய்வார்கள். பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சாமி தரிசனம் செய்ய வேண்டும். பக்தர்களின் வசதிக்காக திருப்பதி, சந்திரகிரி பகுதிகளில் இருந்து சீனிவாசமங்காபுரத்துக்கு பஸ்கள் இயக்கப்படும். பொறியியல் துறை அதிகாரிகள் மேற்கொள்ளும் பணியை 11-ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தேவஸ்தான அனைத்துத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News