செய்திகள்
அமைச்சர் மனோ தங்கராஜ்

முதல்-அமைச்சரை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

Published On 2021-11-18 09:28 GMT   |   Update On 2021-11-18 10:37 GMT
நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படும் என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:

தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் ஏற்பட்டபோது பாதிப்புகளை பார்வையிட வந்த பிரதமர் எந்த பகுதிகளுக்கும் நேரடியாக சென்று பார்க்காமல் கன்னியாகுமரியில் உள்ள விருந்தினர் மாளிகையில் படங்களை மட்டும் பார்வையிட்டுச் சென்றார்.

இந்த நிலையில் அவரது கட்சியைச் சேர்ந்த அண்ணாமலை தமிழக வெள்ளச்சேதங்களை ஊர் ஊராகச் சென்று எல்லா பகுதிகளிலும் பார்வையிட்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பற்றி கூறுவதற்கு எந்தவித தகுதியும் இல்லை.

மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மிக மோசமாக உள்ள நிலையில் அதனை சீரமைக்க இதுவரையிலும் கண்டுகொள்ளாத மத்திய அரசு, தமிழக அரசை குற்றம் சொல்வது வேடிக்கையாக உள்ளது. நாளை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் வெள்ளச்சேதங்கள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அதில் கன்னியாகுமரி மாவட்ட பாதிப்புகள் குறித்து எடுத்துரைக்கப்படும்.



வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் உறுதி அளித்துள்ளார். பேரிடர் இழப்பீடு என்பது மாநில அரசு மட்டுமல்லாது, மத்திய அரசும் இணைந்துதான் வழங்கவேண்டும். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய அரசை மறைத்துவிட்டு பேசுகிறார்கள். இது ஏன்? என்று தெரியவில்லை.

பேரிடர் மீட்பு பணிகள் என்பது மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து முடிவு செய்யவேண்டிய ஒன்று. பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தி.மு.க. அரசு ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. மீண்டும் நாங்கள் அதை வலியுறுத்துவோம். நாங்கள் இரவு-பகலாக வேகமாக பணியாற்றி கொண்டிருக்கிறோம். அதை பாராட்டுவதற்கு அவர்களுக்கு மனமில்லை. களியக்காவிளை- நாகர்கோவில், நாகர்கோவில்- காவல்கிணறு வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மிக மோசமாக உள்ளது.

இது குறித்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் ஏற்கனவே பேசியிருக்கிறார். நாங்களும் பேசி இருக்கிறோம். ஆனால் அது குறித்து மத்திய அரசிடம் இருந்து எந்த தகவலும் இல்லை.

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் இரண்டு வெள்ள சேதங்களை கன்னியாகுமரி மாவட்டம் சந்தித்துள்ளது. தற்போது வந்துள்ளது மூன்றாவது சேதம். கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் சாலைகள் மேம்பாட்டிற்காக தமிழக அரசு ரூ.91 கோடியும், நாகர்கோவில் மாநகராட்சி பணிகளுக்கு ரூ.28 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News