இந்தியா
முகேஷ் வெர்மா

’எங்கள் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியாதான்’- பா.ஜ.கவில் இருந்து 7-வது எம்.எல்.ஏ விலகல்

Published On 2022-01-13 06:46 GMT   |   Update On 2022-01-13 08:03 GMT
தலித், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு பா.ஜ.கவில் எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் பாஜகவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அக்கட்சியைச் சேர்ந்த மந்திரி சுவாமி பிரசாத் மவுரியா, தாரா சிங் சவுகான் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் சில பாஜக எம்.எல்.ஏக்களும் அடுத்தடுத்து பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்நிலையில் தற்போது 7-வதாக முகேஷ் வெர்மா என்ற எம்.எல்.ஏவும் பாஜகவில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

உத்தரப்பிரதேசத்தில் 5 ஆண்டு பாஜக ஆட்சியில் தலித், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்த தலைவர்களுக்கோ, பிரதிநிதிகளுக்கோ எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. மேற்கூறிய சமூகங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். விவசாயிகளையும், வேலையற்ற இளைஞர்களையும் கூட பாஜக மறந்துவிட்டது. 



பாஜக, அம்பேத்கரின் அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தன்னுடைய சொந்த முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறது. மக்களின் வளர்ச்சியை விட தன்னுடைய வளர்ச்சி தான் பாஜகவிற்கு முக்கியம். இதனால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன். சுவாமி பிரசாத் மவுரியா தான் எங்கள் தலைவர். அவர் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் ஆதரவு தருவோம். மேலும் சில எம்.எல்.ஏக்களும் பாஜகவில் இருந்து விலகவுள்ளனர். 

இவ்வாறு முகேஷ் வெர்மா தெரிவித்தார்.

தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் விலகி வருவது பாஜக தலைமையை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
Tags:    

Similar News