செய்திகள்
கேஎஸ் அழகிரி

நாங்குநேரியில் பணப்பட்டுவாடா அ.தி.மு.க.வின் சூழ்ச்சி- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

Published On 2019-10-18 09:35 GMT   |   Update On 2019-10-18 10:11 GMT
நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரத்தில் அ.தி.மு.க.வின் சூழ்ச்சி உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
நெல்லை:

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசை 2021-ம் ஆண்டு அகற்றுவதற்கான முன்னோட்டமான தேர்தல் இந்த தேர்தல். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு தமிழ்நாட்டில் ஊழல் முறைகேடுகளும், விதிமுறை மீறல்களும் நடந்து வருகிறது. ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு வரவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மாணவர்களிடம் நீட் தேர்வு புகுத்தப்பட்டு தற்கொலைக்கு தூண்யுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் மக்களுக்கு எதிரான திட்டங்கள் புகுத்தப்படுகிறது. ஒரே மொழி, ஒரே ரேசன், ரெயில்வே பதவிகளில் வேலையின்மை என்று மக்களுக்கு எதிரான ஏராளமான திட்டங்கள் புகுத்தப்பட்டு வருகின்றது. ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது கல்வி கடன் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

இதன் மூலம் இந்திய மாணவர்கள், அமெரிக்க மாணவர்களுக்கு இணையாக வளர்ந்தனர். ஆனால் இப்போது அந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையில் 3,500 கோடிக்கு டெண்டர் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் விசாரித்து அதில் உண்மை உள்ளது என்றும் இதனை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சி.பி.ஐ. ப.சிதம்பரத்திடம் காட்டும் கண்டிப்பை எடப்பாடி பழனிசாமியிடம் காட்டவில்லை.



மோடி வேட்டி கட்டியதில் மகிழ்ச்சி. ஆனால் வேட்டி கட்டிய விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திய போது ஒருமுறை கூட சந்திக்கவில்லை. அவருக்கு தமிழ் உணர்வு இருக்க வேண்டும். மாநில அரசு கடும் நிதிநெருக்கடியில் உள்ளது. 3 லட்சத்து 55 ஆயிரம் கோடி கடன் உள்ளது. இதற்காக 35 ஆயிரம் கோடி வட்டி கட்டுகிறார்கள். மீதமுள்ள பணத்தை வைத்து அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மட்டுமே கொடுக்க முடியும். எந்த திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. எனவேதான் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

மூலக்கரைப்பட்டியில் தி.மு.க.வினரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதில் உள்நோக்கம் உள்ளது. அங்கு ஆளும்கட்சியினர் ஓட்டுக்கு பணம் கொடுத்துவிட்டு இதை தூண்டிவிட்டுள்ளனர். ஒரு எம்.எல்.ஏ. அறையில் ரூ.2 லட்சம் பணம் இருப்பது சாதாரணமானது. அமைச்சர்கள் அறையில் சோதனை போட்டால் எவ்வளவு பணம் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த வி‌ஷயத்தில் ஆளும்கட்சியின் சூழ்ச்சி உள்ளது. இலங்கை பிரச்சனையில் காங்கிரஸ் எந்தவித துரோகமும் செய்யவில்லை. எந்தவித ஆயுதமும் வினியோகம் செய்யவில்லை. சீமான் விளம்பரத்திற்காக பேசுகிறார்.

7 பேர் விடுதலையில் நீதிமன்ற உத்தரவை வரவேற்போம். காவிரி பிரச்சனையில் காங்கிரஸ் துரோகம் செய்ததாகவும், ராகுல்காந்தி பேசாததை பேசியதாகவும் ஓ.பன்னீர் செல்வம் கூறிவருகிறார். ராகுல்காந்தி பேசியது உண்மை என்று நிருபித்தால் நான் பதவியை ராஜினாமா செய்ய தயார். இல்லை என்றால் ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்வாரா? நாங்குநேரி, விக்கிரவாண்டியில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News